தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால்...

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Updated: Nov 19, 2019, 08:07 AM IST
தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால்...

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதேவேளையில் ஆளுநரின் செயலராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் புதிய தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தகவல் ஆணையர் சம்பந்தமான பரிந்துரை கடிதத்தை அளித்தாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வெளியான செய்தி குறிப்பில், தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் மற்றும் ஆளுநரின் செயலராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., ராஜகோபால், 1984-ல் IAS அதிகாரியாக பணியில் சேர்ந்து, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஆட்சியராக இருந்துள்ளார். மேலும், தற்போது ஆளுநரின் செயலராக இருந்த இவர், தலைமை தகவல் ஆணையராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில், ஆளுநரின் செயலராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ்., நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ராஜகோபால் தற்போது இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக தமிழக தலைமை ஆணையராக இருந்த ஷீலாபிரியா வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக தலைமை தகவல் ஆணையராக யாரை தேர்வு செய்யலாம் என்று முதல்வர் தலைமையில் தேர்வு குழு ஒன்று தேடுதல் குழுவை அமைத்தது.

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சிங்காரவேலு தலைமையில் அந்த தேடுதல் குழுவானது அமைக்கப்பட்டது. அதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.வெங்கடேசன் ஆகிய குழுவானது அமைக்கப்பட்டது. 
மேலும் இந்த பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கான தகுதிகள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. அதன்படி பொது மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்கள், சட்டத்தில் முன் அனுபவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிர்வாகம், மேற்பார்வையில் ஆளுமை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் விண்ணப்பிக்க கூடிய நபர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது, அரசியல் கட்சியைச் சாராதவராகவும் ஆதாயம் தரும் பதவிகளில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த தேடுதல் குழுவானது வந்திருந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவிடம் சமர்ப்பித்தது. இன்றைய தினம் காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தேடுதல் குழு கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவதற்கான கூட்டம் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் குழுவில் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் மூன்று பெயர்களுடன் கூடிய அந்த இறுதிப் பட்டியலை ஆளுநரிடம் நேரில் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ் தற்போது மாநில தகவல் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.