Tamil Nadu Latest News: சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர், "தொடர் தோல்வி விரக்தியில் தமிழ்நாட்டில் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வருகிறார். தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல, கலை மற்றும் அறிவுசார் மாநிலம். சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம். ஆட்சியுடன் தொடர்புடைய கொலைச் சம்பவங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை.
அண்மையில் நடந்த 5 கொலைச் சம்பவங்களை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். அதில் ஒன்று புதுவையில் நடந்தது, மற்ற 4 கொலைச் சம்பவங்களும் அரசுடன் தொடர்புடைய கொலைகள் இல்லை. சொந்த காரணங்களுக்காக நடந்த முன்விரோதக் கொலைகள் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவு எந்த கொலைச் சம்பவமும் தமிழகத்தில் நடக்கவில்லை" என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார்.
'அரசு பொறுப்பேற்க முடியாது'
தொடர்ந்து பேசிய அவர்,"கருணாநிதி இருந்தபோது 4 கோடி மக்களுக்கு தலைவராக இருந்தார், இன்று ஸ்டாலின் 8 கோடி மக்களுக்கு தலைவராக இருக்கிறார். மக்கள் தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எனவே மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து பார்த்தால் கொலைச் சம்பவங்களும் அதிகமாகவோ, குறைவாகவோ தெரியலாம். எனவே கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.
மேலும் படிக்க | கொலை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் - சபாநாயகர் அப்பாவு!
மக்கள் தொகை அதிகரிப்பால் கொலைகள் அதிகரித்திருப்பாதக நான் கூறவில்லை, 4 கோடி பேர் இருந்தபோது நடந்த கொலைகளின் எண்ணிக்கையிலேயே இப்போது 8 கோடி பேராக மக்கள் தொகை அதிகரித்த பின்னும் கொலைகள் நடக்க வேண்டும் என கூற முடியாது. முன்விரோதத்தால்தான் கொலைகள் நடக்கின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் நடக்கிறது என கூற முடியாது என்பதால் அதை குறிப்பிட்டேன்" என விளக்கம் அளித்தார்.
'97 சதவீத சிறைகள் நிரம்பியுள்ளன'
மேலும் தொடர்ந்த அவர்,"ஆனாலும் யார் யாருக்கெல்லாம் முன் விரோதம் உள்ளது என்பதை எல்லாம் கண்டறிந்து வருகிறோம். காவல்துறை வசம் இருக்கும் ரவுடிகளின் பட்டியலைக் கொண்டு ரவுடிகளுக்குள் இடையே உள்ள முன்விரோதங்களை கண்டறிந்து தீர்த்து வைத்து வருகிறோம். கொலைகளை தடுக்க இவ்வாறான முன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலேயே இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழிலதிபர்கள் தமிழகத்தை நாடி வருகின்றனர். தமிழகத்தை பின்னோக்கி தள்ள நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு நிறைவேறாது. ஏ, பி பட்டியலில் உள்ள ரவுடிகள் விசாரிக்கப்படுகின்றனர். காவல்துறையினரால் ரவுடிகள் எச்சரிக்கப்படுகின்றனர்.
கொலை செய்யப்பட்டு இறந்தவரின் முதல் ஆண்டு நினைவஞ்சலிக்குள் பழிவாங்கிவிடுவேன் என்ற உணர்ச்சியில்தான் தற்போது கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது , ஆனாலும் கொலைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதால் 97 சதவீத சிறைகள் நிரம்பியுள்ளன.
பாதுகாப்பு அளிக்க தயார்
சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறார் குற்றவாளிகள் சீர்திருத்தப்பட்டே வெளியில் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் வெளியில் வந்த பிறகு நன்னடத்தை அலுவலர்களால் கண்காணிக்கப்படுகின்றனர். பெரும்பாலான சிறார் குற்றவாளிகள் மீண்டும் சிறை செல்வதில்லை , திருந்தி வாழ்கின்றனர்" என்றார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருந்த நிலையில் அதுகுறித்த கேள்விக்கு,"முன்னாள் குற்றவாளிகளை நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் உருவாகின்றனர். 100 குற்றவாளிகளை காவல்துறை கண்காணித்துக் கொண்டிருக்கும்போது புதிதாக 2 குற்றவாளிகள் உருவானால் நாங்கள் என்ன செய்ய முடியும்?. அவர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து கண்காணிக்கிறோம். ரவுடிகளுக்கு, கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகள் வாங்கித் தரப்படும்.
அச்சுறுத்தல் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம் , ஆனால் யாரும் அப்படியான கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. நீங்கள் குறிப்பிடுவதைப் போல் ஜான் பாண்டின் போன்ற அரசியல்வாதிகள் அரசிடம் பாதுகாப்பு கோரி கோரிக்கை விடுத்தால் உள்துறையிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
ஆணவக் கொலை...
மேலும்,"கிளைச் சிறைகளில் சில மூடப்படுவதாக கூறப்படும் வதந்திகளுக்கு பதில் கூற முடியாது. மோசமான நிலையில் உள்ள கிளைச் சிறைகள் பழுது பார்க்கப்பட்டு அவற்றை தொடர்ந்து இயக்கவே கூறியுள்ளோம். எந்த கிளைச் சிறையையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பழுது பார்க்க நிதி கேட்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் நியமனம் அரசின் முடிவு. 15 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்தவர்களை குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநராக நியமிக்க பழைய குற்றவியல் சட்டங்களிலும் விதிகள் இருக்கின்றன. தற்போது தற்காலிகமாகத்தான் நியமிக்கப்பட்டுள்ளார் , நிரந்தரமாக அல்ல.
தருமபுரியில் ஆணவக் கொலை நடந்துள்ளதாக கேட்கிறீர்கள். ஆணவக் கொலை தொடர்பாக அரசு தைரியமான முடிவை எடுக்கும். ஒருபோதும் ஆணவக் கொலையை அரசு அனுமதிக்காது, ஆதரிக்காது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படும்" என்றார்.
மேலும் படிக்க | கிசுகிசு : ராஜ்பவனார் டெல்லியில் காட்டிய கடுகடுப்பு, கேபினட்டில் அடுத்த தலைக்கு குறி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ