பருவமழை பொய்த்தன் காரணமாக தமிழகம் கடுமையான வறட்சியில் தவிக்கிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு மாநிலம் முழுவதும் பார்வையிட்டது. அதன் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று மனு வழங்கபட்டது. இந்த மனுவை முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் மாநில மீட்ப்புப்பணிகள் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பிரதமர் அலுவலகத்தில் வழங்கினார்.
தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை வழங்க வேண்டும் என்று கோரியுள்ள அதே வேளையில் இந்த தொகையானது மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கபப்ட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மனுவில் வறட்சி நிலையை நேரில் பார்வையிட மத்திய குழுவை அனுப்விக்க கோரிக்கை வைக்கபட்டு உள்ளது.
நீர்நிலைகளில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை மதிப்பிடவும் இக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 15 முக்கிய அணைகளில் 25.74 டிஎம்சி நீரே உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.