விஜயகாந்த், தங்களது கூட்டணியில்தான் இணைவார் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக் கப்பட்டுள்ளன. தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீடு பிரச்னையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மிகப்பிரம்மாண்டமான மெகா கூட்டணி என்று கூறினால் அது அதிமுக, பாஜக, பாமக இடம் பெற்றிருக்கும் கூட்டணிதான். தேமுதிக எங்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக கூட்டணியில் வன்முறைகளும் இழுபறிகளும் இருக்கின்றது. மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.