விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வந்த நிலையில், இன்று அந்த உயிரிழப்பின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் புதுவை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து, அவர்கள் குடித்திருந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது. இவர்களில், மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தோர் சிகிச்சை பலனலிக்காமல் தாெடர்ந்து உயிரிழந்து வந்தனர். நேற்றுவரை 12 பேரை விஷம் கலந்த கள்ளச்சாராயம் பலிவாங்கியிருந்தது. இந்நிலையில் இந்த பலி எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
நலம் விசாரித்த முதல்வர்:
கள்ளச்சாராய விவகாரத்தில் 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார், டிஜிபி சைலேந்திர பாபு. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரத்திற்கு சென்றார். அங்கு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். பின்பு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிரடி ஆக்ஷனில் முதல்வர்:
கள்ளச்சாராய விவகாரத்தில் தாெடர்புடைய அமாவாசை, சந்துரு வேலு ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சுமார் 135 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் மேலும் தொடர்புடைய ராஜேஷ் என்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்த அவர், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும் கள்ளச்சசாராயம் விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
உயிரிழப்பிற்கான காரணம்:
விழுப்புரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பாேது கள்ளச்சாராயம் அருந்திய இத்தனை பேர் உயிரிழந்ததற்கான காரணத்தை தெரிவித்தார். கள்ளச்சாராயத்தை விற்றவர்கள் மெத்தனால் எனும் எரிசாராயத்தை அதில் கலந்ததனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை வைத்து கள்ளச்சாராயம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் ட்வீட்:
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தமிழகத்தில் தலைதூக்கியுள்ள நிலையில், எதிர்கட்சி தலைவர்கள் உள்பட பல அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் அரசு இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்று கூறிவருகின்றனர். அ.தி.மு.க கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.
கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது… pic.twitter.com/64Fw5RzI7T
— M.K.Stalin (@mkstalin) May 15, 2023
இந்த நிலையில், ஸ்டாலின் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், “கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் 3 பெண்கள் உள்பட 10 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ