அவை எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை காட்டவே இன்று போட்டி சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.
போட்டி சட்டசபை கூட்டம் முடிந்த பின் அவர் மேலும் கூறியதாவது:- அவையில் கேலியோ, கிண்டலோ செய்யக்கூடாது என்றும், மக்கள் பிரச்சனை மட்டும் பேச வேண்டும் என முன்கூட்டியே
அறிவுறுத்தி இந்த கூட்டத்தை நடத்தியிருக்கிறோம். எங்கள் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி இன்றும் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தொடர்ந்து
வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் உடன்படவில்லை. அனைத்து கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். நேரடியாக பதிவு செய்து ஒளிபரப்பு செய்யப்பட்டதாக அறிந்தேன்.
அவை நடவடிக்கைகள் மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த நிலை தான் வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த மனு திங்கட்கிழமை
விசாரிக்கப்படவுள்ளது. மேலும் தொடர்ந்து என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தலைவருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.