திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது போல வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சட்ட மேலவையை நிறுவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1861ல் பிரிட்டிஷ் அரசு இந்திய கவுன்சில் சட்டம் 1861 ஐ இயற்றி, அதன் மூலம் மேல் அவையை உருவாக்கியது. ஆரம்பத்தில் சென்னை ஆளுநருக்கு பரிந்துரை வழங்கும் அவையாகவே இந்த அவை இருந்து . இந்திய கவுன்சில் சட்டம் 1892-ன் மூலம் இதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பொறுப்புகளும் அதிகரித்தன.
1920-1937 ல் சென்னை (Chennai) மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தபோது மாகாணத்தில் ஓரங்க சட்டமன்றமாக இந்த அவை செயல்பட்டது. 1937 இல் மாநில சுயாட்சி முறை அறிமுகப் படுத்தப்பட்டு சட்டமன்றம் ஈரங்க அவையாக மாறியது.
1947ல் இந்தியா விடுதலை பெற்று 1950 இல் குடியரசாகியபோது உருவாகிய சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திலும் இது மேலவையாகத் தொடர்ந்தது. 1969 இல் சென்னை மாநிலம் தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது இந்த அவையின் பெயரும் “தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்று மாற்றப்பட்டது.
1986-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் இந்த அவை நீக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றம் ஓரங்க அவையாக மாறியது. பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை (நீக்கம்) சட்டம் 1986-ல் நிறைவேற்றப்பட்டு ஆகஸ்ட் 30 1986 ல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நவம்பர் 1 1986 ல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது.
பின்பு ஒவ்வோரு முறை திமுக (DMK) ஆட்சி பொறுப்பை ஏற்கும் போதும் மேலவை தோற்றுவிக்க முயற்சிகள் செய்யப்படும். பின்பு அடுத்து ஆட்சி மாறியவுடன் இதற்காக ஏற்பாடுகள் அனைத்தும் முறியடிக்கப்படும். இவ்வாறே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.
2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கையில் கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் அமைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் 1989, 1996 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற போதும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அப்போதெல்லாம் மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய ஆதரவில்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
ALSO READ: TN Budget 2021: வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?
2006ல் மு. கருணாநிதி (M Karunanidhi) ஐந்தாவது முறையாகத் தமிழக முதல்வரான பின் அதற்கான பணிகள் தொடங்கின. மே 24 2006 ல் தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் ஆளுநர் உரையில் மேலவையை மீண்டும் கொண்டுவர சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்ற குறிப்பு இடம் பெற்றிருந்தது. நான்காண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 12, 2010 ல் தமிழக சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 4 2010 ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைச் சட்டம் 2010 ஐ நடுவண் அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அடுத்த இரு நாட்களில் அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 30 செப்டம்பர் 2010 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் மேலவை தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார். மேலவையை மீண்டும் அமைப்பதற்கான பணிகள் நடந்தன.
ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரான பின்னர் அதிமுக அரசால் மீண்டும் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
தற்போது 2021 சட்டமன்ற தேர்தலின் வாக்குறுதியில் திமுக, தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்’ என தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி , இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி வரும் 14ஆம் தேதி நள்ளிரவில் சட்டமன்றம் கூடுமானால் மேலவைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் சட்ட மேலவை இருந்து வருகிறது.
ALSO READ: TN Budget மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படும் : சபாநாயகர் அப்பாவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR