வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது விவசாயிகளின் ஒற்றுமைக்கான வெற்றி - சீமான் பாராட்டு

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என நாம் தமிழர் கட்சியின் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2021, 02:41 PM IST
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்
  • பிரதமர் மோதி அறிவித்தார்
  • வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றதற்கு பலரும் பாராட்டு
வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது விவசாயிகளின் ஒற்றுமைக்கான வெற்றி - சீமான் பாராட்டு title=

புதுடெல்லி: விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு காரணமாக இருந்த வேளாண் சட்டங்களை இன்று மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் பிரதமருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் (Nam Thamilar Katchi) சார்பில், சீமான், தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

கொடிய வேளாண் சட்டங்களைத்  திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கைக் கண்டித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இரவு, பகல் பாராது வெயிலிலும், மழையிலும், பனியிலும் வாடி, கடும் அடக்குமுறையையும், அரச வன்முறையையும்  எதிர்கொண்டு நாட்டின் நலனுக்காகத் தன்னலமின்றி அயராது போராடிய வேளாண் பெருங்குடி மக்களின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே இதனைக் கருதுகிறேன். 700 க்கும் மேலான விவசாயிகளின் உயிரீகத்தாலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளினாலும் அளப்பெரும் போராட்டத்தினாலுமே இந்நாட்டின் வேளாண்மையை வணிகமாக்கிடும் இக்கொடும் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என்பது மறுக்கவியலா பேருண்மையாகும்.

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மைப்பலத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, நாட்டின் வளங்களைப் பன்னாட்டுப்பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் பல்வேறு திருத்தச்சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அதில் உச்சமாக, நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையைச் சீரழித்து, விவசாயிகளைப் பன்னாட்டுக்கூட்டிணைவு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் ( Farm Laws ) வலியத் திணிக்கப்பட்டது. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி எதேச்சதிகாரப் போக்குடன் மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து அறவழியில் தொடர்ச்சியாகப் போராடிய வேளாண் பெருங்குடி மக்களின் இடைவிடாத எதிர்ப்புப்போராட்டத்தின் விளைவாகவே தற்போது கொடுங்கோன்மை மோடி அரசு அடிபணிந்துள்ளது.

ALSO READ | மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது மத்திய அரசு

ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக வேளாண் பெருங்குடி மக்கள் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டு, அரசின் பலகட்டப் பேச்சுவார்த்தையை சமரசமின்றி எதிர்கொண்டு, பல விவசாயிகள் அப்போராட்டக்களத்திலேயே தங்கள் இன்னுயிரை உயிரிழந்தபோதும் கண்டுகொள்ளாது, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறமுடியாது என்று இறுமாப்புடன் கடந்துசென்ற ஈவு இரக்கமற்ற மோடி அரசு (Modi Government), தற்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளதற்கு முக்கியக்காரணம் விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல்களேயாகும்.

உயிர், உடைமை, பொருளாதாரம் என்று பல்வேறு இழப்புகளைச் சந்தித்தபோதும் விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாத மோடி அரசு, தற்போது தங்கள் ஆட்சியதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே வேறு வழியற்ற சூழலில் விவசாயிகளின் போராட்டத்திற்கு அடிபணியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே, வெறும் வாய்மொழி அறிவிப்போடு நின்றுவிடாமல் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன்.

READ ALSO | விவசாயிகளின் போராட்டத்தின் முதலாண்டு நிறைவு; நாடாளுமன்றத்திற்கு பேரணி

உறுதியான மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைப்பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு மற்றுமொரு வரலாற்றுச்சான்றாக வேளாண் சட்டங்களுக்கெதிரான இவ்விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பித்துள்ளது

வருங்காலத் தலைமுறைகள் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப்பெற்றுள்ள வேளாண் பெருங்குடி மக்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன். என தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

Also Read | வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News