புதுசா புதுசா போதையை அனுபவிக்கும் இளைஞர்கள்.! மாஃபியா ‘கேங்’-ஐ கூண்டோடு பிடித்த தருமபுரி போலீஸ்

தருமபுரி அருகே போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்து கிராமப்புற இளைஞர்களுக்கு விற்பனை செய்துவந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 12, 2022, 01:57 PM IST
  • கஞ்சா, கொக்கைன் போல புது போதை மருந்து
  • வலிநிவாரணியை போதைப் பொருளாக்கி விற்பனை
  • போதைக்கு அடிமையான கிராமப்புற இளைஞர்கள் குறிவைப்பு
புதுசா புதுசா போதையை அனுபவிக்கும் இளைஞர்கள்.! மாஃபியா ‘கேங்’-ஐ கூண்டோடு பிடித்த தருமபுரி போலீஸ் title=

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எந்த வலியும் இல்லாமல் சிகிச்சை மேற்கொள்வதற்காக வலிநிவாரணி என்னும் மருந்தை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் செலுத்துவர். இந்த மருந்தை உட்கொண்டால் நோயாளிக்கு வலி தெரியாது. ஒருவித மயக்க நிலையிலேயே இருப்பார்கள். மேலும், இந்த மருந்து அறுவைச் சிகிச்சை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலுத்துவதுண்டு. இந்த மருந்தினை கிராமப்புற இளைஞர்கள் போதை வஸ்துவாக பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுப்பழக்கம், கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள், அதைத்தாண்டியும் புதுப்புது போதைப் பழக்கத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும் படிக்க | தேனி எல்லையில் சிக்கிய 123 கிலோ கஞ்சா மூட்டை..!

அனபாண்ட் போதை, இருசக்கர வாகன பெட்ரோல் டாங் மூடியை கழட்டிவிட்டு மோந்துபார்ப்பது, பட்டன் என அழைக்கப்படும் மாத்திரை வகை போதை என பல வகைகளில் போதைக்கு அடிமையான இளைஞர்கள் முயன்றுபார்த்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் புதிதாக தற்போது வலிநிவாரணி எனப்படும் பென்சிலின் வகை மருந்துகள் பக்கம் திரும்பியுள்ளனர். பிற போதைப் பொருட்களை பயன்படுத்தும்போது அதன் வாசனை அல்லது வெளிப்புறத் தோற்றம் மூலம் பிறரிடம் காட்டிக்கொடுத்துவிடுவதால் தற்போது இந்த வலிநிவாரணியை நோக்கி போதை ஆசாமிகள் திரும்பியுள்ளனர்.

குறிப்பாக, தருமபுரி பகுதியில் போதைக்கு அடிமையான சில இளைஞர்கள் வலிநிவாரணி மருந்தை போதையாக ஊசி மூலம் செலுத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இளைஞர்களை குறிவைக்கும் கும்பலைப் பிடிக்க தருமபுரி சரக மருந்தக ஆய்வாளர் சந்திராமேரி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் களத்தில் இறங்கினர். கோம்பேரி கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல் என்பவர் வலிநிவாரணி மருந்தை போதையாக ஊசி மூலம் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து, அவரை சம்பவ இடத்துக்கே சென்று போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், தருமபுரி நகர்ப்பகுதியில் உள்ள மெடிக்கல் உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர் சிக்கினார். அவரிடம் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், காமராஜ் என்பவர் பிடிபட்டார். இவர்தான், போதைப் பொருட்களை நகர்ப்பகுதிகளில் புழங்கவிடும் நபர் என விசாரணையில் தெரியவந்தது.

மொத்தமாக இவர்கள் அனைவரும் எங்கிருந்து சரக்குகளை வாங்குகிறார்கள் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பிடிபட்ட மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில், சாமிசெட்டிபட்டி கிராமத்தில் இருந்துதான் மொத்த சரக்குகளும் கைமாறுவதாக போலீஸார் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்தக் கிராமத்திற்குச் சென்ற போலீஸார், குடிசை வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக வலிநிவாரணி மருந்துகளை பறிமுதல் செய்தனர். கிட்டத்தட்ட, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மருந்துகள் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, விற்பனையில் ஈடுபட்ட வஜ்ஜிரவேல், காமராஜ், முருகேசன் மற்றும் சோமசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். 

மேலும் படிக்க | தமிழகத்தில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி - சாதித்த மருத்துவத்துறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News