உதயநிதிதான் அறிவாலாயத்தின் அடுத்த தலைமை என்று பலர் பேசினர். அதனை எல்லாம் உதயநிதி இல்லை இல்லை என்று மறுத்துவந்தார். ஒருகட்டத்தில் புதுக்கோட்டையில் அவர் பேசியபோது என்னை சின்னவர் என்று அழையுங்கள் என்றார். திராவிடத்தை பொறுத்தவரை பெரியவர் ஒருவர்தான் அவர் பெரியார்தான் என பலர் குரல் உயர்த்த; அடுத்த மேடையில் இல்லை என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள் என்றார் உதயநிதி.
இப்படிப்பட்ட சூழலில் இன்று உதயநிதி பிறந்தநாள் காண்கிறார். தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்களில் உதயநிதி சிரிக்கிறார். ஆனாலும் அதில் சின்னவர் என்றே கொட்டை எழுத்துக்கள் இருக்கின்றன. அந்தப் அழைப்பிதழ்களை பார்க்கும்போதெல்லாம் அடிமை சங்கிலியை அறுத்து எறிய வேண்டுமென கூறிய திராவிட முன்னேற்ற கழகமும், அதன்படி வளர்ந்த தொண்டர்களும் பண்ணையாரின் கீழ் இருக்கிறார்களோ என்றே தோன்றுகிறது.
இந்தச் சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சின்னவர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் சிறப்பு கூட்டம் நடந்தது. 5 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டு மணி நேரங்கள் கழித்தே கூட்டம் ஆரம்பித்தது. அறிவாலயத்தின் அடுத்த பவர் சென்ட்டரின் பிறந்தநாளுக்கு தானா சேர்ந்த கூட்டம் என நினைத்து உள்ளே போகும்போதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு நடை சின்ன யானை வண்டியில் மக்களை கூட்டம் கூட்டமாக ஏற்றிவந்தனர். அதில் சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும் ஏராளம். வண்டியிலிருந்து அவர்களை இறக்கி ‘லியோனி போகும்வரை இருந்தால்தான் உங்களுக்கு காசு’ என ஒருவர் கூற அத்தனை பெண்களும் வரிசைக் கட்டி கூட்டத்துக்குள் நுழைந்தனர்.
பள்ளியும், கல்லூரியும் படிக்கும் இளைஞர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, ‘ப்ரோ எவ்ளோ கொடுக்குறாங்கனுலாம் தெரியல ப்ரோ’ என நகர்ந்தனர். கல்விக்கும், வாழ்க்கைக்கும் உரிய கணிதம் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள்; சுயமரியாதை, இலக்கியம், அறிவியல் பேச வேண்டியவர்கள்; யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என கணக்கு எடுத்துக்கொண்டிருந்தனர்.
சித்தாந்தகளாலும், அதன் வழி வந்த தலைவர்களாலும், அவர்களின் அறிவியல், இலக்கியம் கலந்த மேடை பேச்சுக்களாலும் வளர்ந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் தற்போதைய நிலையை பார்க்கும்போது திமுக என்பது சித்தாந்தங்களை தொலைத்து சில்லறைகளுக்கு செல்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. நேற்று காலை தாழையூரில் 84 வயதான தங்கவேல் என்பவர் இந்தி திணிப்புக்கு எதிராக தீக்குளித்து உயிரை விட்டார்.
அதேநாள் மாலை சின்னவர் உதயநிதி பிறந்தநாளுக்கு இப்படிப்பட்ட கூத்துக்கள் அரங்கேறுகின்றன. பேரறிஞரும், கலைஞரும் இதை விரும்பமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.... எப்போது மாறும் அறிவாலயம்... அதெல்லாம் சரி பெயர் எழுதியாயிற்று பட்டுவாடா ஒழுங்காக நடந்துவிடுமா உதயநிதி?...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ