சர்க்கரை ஆலைகளுக்கு மானிய கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததால் தமிழ்நாட்டிற்கு பயன் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
கரும்பு சாகுபடி மற்றும் சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி ஒதுக்கீட்டு அறிவிப்பால், தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லையென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டில் சர்க்கரை தொழிலை காப்பாற்றும் வகையில், போதுமான அளவு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக, கரும்பு உற்பத்தி மற்றும் அது சார்பு தொழில்கள் எதிர்மறையான வளர்ச்சியை கண்டிருப்பதுடன், குறைந்தளவு பயன்பாட்டு திறன் கொண்ட தொழிலாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளில் பெரும்பாலானவை தனியார் சர்க்கரை ஆலைகள் என்றும், அவை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்கு, நியாயமான விலை, லாபகரமான விலையை வழங்குவதற்காக, அதிக வட்டிக்கு கடன்பெற்று நிலுவைத் தொகையை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குறைந்த சர்க்கரை உற்பத்தி கொண்ட ஒரு மாநிலத்தில், அதனை இருப்பு வைப்பதற்கான உச்ச வரம்பு, ஆலைகளின் நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்குவதோடு, நிலுவை தொகை வழங்குவதையும் பாதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை தேவையுள்ள நிலையில் வெறும் 5.8 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை மட்டும் உற்பத்தி ஆகிறது. எனவே, சர்க்கரை இருப்புக்கான உச்சவரம்பிலிருந்து, தமிழ்நாட்டிற்கு தளர்வு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.