சென்னை ராணுவ கண்காட்சி நிறைவு விழாவில் கவர்னர் பங்கேற்பு!!

சென்னை அருகே நடைபெற்ற ராணுவ கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.

Last Updated : Apr 15, 2018, 06:47 AM IST
சென்னை ராணுவ கண்காட்சி நிறைவு விழாவில் கவர்னர் பங்கேற்பு!! title=

இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் சார்பாக சர்வதேச ராணுவ கண்காட்சி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியில் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு ராணுவ தடவாள நிறுவனங்கள் பங்குபெற்றன.

சென்னை மாமல்லபுரத்தில் இந்திய ராணுவம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை சார்பில் இந்த ராணுவ கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் போன்றவை இந்த கண்காட்சியில் இடம் பெற்றன. இதை தொடர்ந்து, முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ந் தேதி முறைப்படி தொடங்கி வைத்தார்.

இதில், முக்கிய நிகழ்வாக ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வது தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதைத்தவிர, கண்காட்சியில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இந்த கண்காட்சியை முன்னிட்டு, பாதுகாப்புத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ‘ஐடெக்ஸ்’ என்ற திட்டத்தை அவர் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, நேற்று நிறைவு விழாவில் பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்:- 

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தித்திறன், உலக அளவில் நமது நாட்டுக்கு மரியாதையை பெற்றுத் தந்துள்ளது. மேலும், நமது திறனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு உள்ளன. பாதுகாப்பு படைகளின் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏவுகணைகளை உருவாக்கி தந்து உள்ளது.

இந்த ராணுவ கண்காட்சியின் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படுவதுடன், பாதுகாப்பு தளவாடங்களின் எண்ணிக்கையும், தரமும் அதிகரிக்கும் என்றார்.

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்ற இந்த ராணுவ கண்காட்சியை 3லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.

Trending News