பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புத் துறை (சி.டி.டி) 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை பயங்கரவாத நிதி வழக்கு தொடர்பாக இன்று (புதன்கிழமை) கைது செய்ததாக, அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீது. மும்பையில், 2008-ல் நடந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீசை தேடப்படும் குற்றவாளியாக ஐ.நா. அறிவித்து உள்ளது.
ஹபீஸ் சயீத்துக்கு எதிராக பாகிஸ்தானில் 23 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், ஜமாத் உத் தவா நடத்தும் கல்விக் கூடத்திற்காக நிலத்தை அபகரித்த வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றமானது ஹபீஸ் சயீத்திற்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியது.
உலகளவில் பயங்கரவாதி பட்டியலில் இடம் பெற்றுள்ள சயீத் லாகூரிலிருந்து குஜ்ரான்வாலாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டு ஹபீஸ் சயீத் நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.