அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூலை 22), 50 மில்லியன் சோதனைகளுடன் கொரோனா வைரஸ் கோவிட் -19 சோதனையின் (Covid-19 Testing) அடிப்படையில் தனது நாடு உலகில் முன்னிலை வகிக்கிறது என்றும், 12 மில்லியன் சோதனைகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் கூறினார்.
வெள்ளை மாளிகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், "இன்று, நாம் முதல் முறையாக - 50 மில்லியன் சோதனைகளை தாண்டிவிட்டோம். இது உலகின் எந்த நாட்டையும் விட மிக அதிக அளவு பரிசோதனை எண்ணிக்கையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) , உலகெங்கிலும் கொரோனா வைரசை பரப்பியதற்காக மீண்டும் சீனாவை அவதூறாக பேசியதோடு, “சீன வைரஸ்” ஒரு தீய மற்றும் ஆபத்தான நோய் என்றும் கூறினார்.
இப்படிப்பட்ட ஒரு மோசமான, பயங்கரமான வைரஸ் சீனாவிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அது நடந்துவிட்டது. சீன வைரஸ் உலகை தாக்கியது. இப்போது உலக நாடுகள் இதனால் தவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதை சமாளிப்பதில் நாங்கள் முழு முனைப்புடன் உள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் மற்ற நாடுகளுக்கும் உதவி வருகிறோம்” என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
அமெரிக்காவில் அதிகமான சீன தூதரகங்களை மூடுவதற்கான தனது திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், "கூடுதல் தூதரகங்களை மூடுவதைப் பொறுத்தவரை, அது எப்போது வேண்டுமானால் நடக்கக்கூடும். நாங்கள் மூடிய தூதரகத்தில் தீ பற்றியதாக செய்தி வந்தது. சில ஆவணங்களும் காகிதங்களும் எரிக்கப்பட்டன என நான் நினைக்கிறேன். வேறொன்றும் இல்லை. எனக்கே இதைப் பற்றி இன்னும் வியப்பாக உள்ளது” என்று தெரிவித்தார்.
COVID-19 தொற்றுநோயை சமாளிக்க தனது அரசாங்கம் ஒரு சக்திவாய்ந்த மூலோபாயத்தை உருவாக்கி வருவதாகவும் அமெரிக்க அதிபர் கூறினார். "இந்த தொற்றுநோயைப் பற்றியும் இது யாரைத் தாக்குகிறது என்பது பற்றியும் நாங்கள் நன்றாக தெரிந்துகொண்டுள்ளோம். மிகவும் சக்திவாய்ந்த ஒரு செயலுத்தியை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் சில பகுதிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில பகுதிகளில் சில குறைபாடுகள் உள்ளன. நாம் இதில் முன்னேற்றம் காண்பதற்கு முன்னர் நிலைமை சிறிது மோசமாகக்கூடும் என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான உண்மையாகும்"என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
ALSO READ: COVID-19 தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் பணியாற்ற தயார்: Donald Trump