அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புபடை வீரர்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு - காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவலை தொடர்ந்து, எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உட்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "எல்லையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச விதிகளை மீறி கொத்து குண்டுகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் அச்சுறுத்தலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஐ.நா., கவனத்தில் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டால், மட்டுமே தெற்கு ஆசியாவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவும். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட தயாராக உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தி கொள்ள இதுவே சரியான நேரம் இது. என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையில் இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டபின் பின் வாங்கிய அமெரிக்க அரசு, இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை என்று கூறி நிறுத்திக்கொண்டது.
எனினும், காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவை. அதை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி சர்ச்சையினை உண்டாக்கினார்.