கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மிருகங்களுக்கும் முகக்கவசம் அணிவித்து மக்கள் விழிப்புடன் செயற்படுக்கின்றனர்.
சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் 774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடைசியாக வெளியான தகவல்படி 1,765 பேர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பு தங்கள் செல்லப்பிராணிகளான நாய்களுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக சீனர்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் செல்லப் பிராணிகளான நாய் , பூனைக்கும் முகமூடிகளைப் பயன்படுத்தி மிருகங்களின் முகத்தை மறைத்துள்ளதோடு , கண்கள் தெரிவது போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உலக சுகாதார நிறுவனமான WHO இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் மீது கண்டறியப்படவில்லை என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது.