இன்று 95வது பிறந்த தினம்: தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள்! தடம் பதித்து நடப்பவர்கள் மாமனிதர்கள் -புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ
ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை! எதற்காக வாழ்ந்தான் என்பதில் தான் அவனது வாழ்க்கை தத்துவமே அடங்கியிருக்கிறது. அப்படி ஒரு சிலர் மட்டும் தான் தங்களது மறைவிற்கு பின்னும் மற்றவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறார்கள். அப்படியொருவர் தான் "மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ" அவர்கள் தன் வாழ்நாள் முழுவதுமே புரட்சியின் மூலம் அமெரிக்கவின் சர்வாதிகாரத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
பாட்டாளி வர்க்க தோழனாக வாழந்து மறைந்த கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். என்னதான் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் சிந்தனை அனைத்தும் பாட்டாளி வர்க்கத்தின் மீதே இருந்தது.
முன்னாள் ராணுவ வீரரான இவரது தந்தை ஸ்பெயின் நாட்டினை சேர்ந்தவர். தாயார் லினா கியூபாவை சேர்ந்தவர். இவர்கள் பல ஏக்கர் கணக்கில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர்.
காஸ்ட்ரோவின் ஆரம்பகலம்:
தனது பள்ளிப்படிப்பை "சாண்டியாகோ-டி-கியூபாவில் லா சேல் என்னும் பள்ளியில் காஸ்ட்ரோ பள்ளி படிப்பை தொடங்கினார். பின்னர் அங்கிருந்து "டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்பு ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் மற்றும் அறிவியல் பாடத்தை தேர்வு செய்து தனது பட்டப் படிப்பை முடித்தார். அக்கல்லூரியில் படித்தபோது அவருடைய சிந்தனை முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியது. அமெரிக்காவின் ஒவ்வொரு கட்டளைக்கும் அடிபணிந்து நடந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக களமிறங்கினார்.
இதற்காக 1953 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இளைஞர்களை திரட்டி கிழக்கு நகரான சாண்டியாகோவில் பாடிஸ்டாவின் சர்வாதிகார அரசுக்கு எதிராக போராடினார். ஆனால் அவருக்கு இப்போராட்டம் தோல்வியையே கொடுத்தது. இதன் விளைவாக பிடல் காஸ்ட்ரோவும் அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேகுவேரா சந்திப்பு:
கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் "நீங்கள் என்னை கைது செய்யலாம் ஆனால் வரலாறு என்னை விடுதலை செய்யும் என்று ஆவேசமாக உரை நிகழ்த்தினார். இந்த உரை அங்கிருந்த நீதிபதிகளின் மனதை கரைத்து விட்டது. பின்னர் சிறையிலிருந்து 1955 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலைக்குப் பிறகு தான் பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் பல்வேறு அதிரடி திருப்பங்களும் நடந்தது. அதில் ஒன்றுதான் இன்னொரு புரட்சியாளரான சேகுவேராவின் சந்திப்பு. மெக்சிகோ நாட்டில் பிடல் காஸ்ட்ரோ அடைக்கலம் புகுந்தார். அங்குதான் சேகுவேரா உடன் நட்பு ஏற்பட்டு புரட்சி குழு ஒன்றை உருவாக்கினார்.
பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக காஸ்ட்ரோவின் கொரில்லாப் படைகள் பெருமளவில் போராடின. அவருடைய கொரில்லாப் படைகள் தலைநகர் ஹவானாவை 1959 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி கைப்பற்றினார்கள். பின்னர் கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவின் சதி வேலைகள்:
கியூபா ஜனநாயக பாதைக்கு திரும்பும் என காஸ்ட்ரோ அறிவித்ததால் அமெரிக்கா முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் காஸ்ட்ரோ சில பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொண்டார். இதனால் எரிச்சலடந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவை கவிழ்க்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.
இதனை உணர்ந்து கொண்ட பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவின் முக்கிய எதிரியான சோசலிச சோவியத் ரஷ்யாவின் பக்கம் சேர்ந்து கொண்டார். இதனால் விரைவிலேயே அமெரிக்காவிற்கு சவாலாகவும் திகழ்ந்தார்.
638 முறை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த காஸ்ட்ரோ:
அமெரிக்கா பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்காக 638 முறை சதித் திட்டங்களை தீட்டியுள்ளது. அமெரிக்கா காஸ்ட்ரோவுக்கு எதிராக தீட்டிய சதித் திட்டம் அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது. ஒவ்வொரு கொலை முயற்சியையும் அவர் துணிச்சலாக எதிர்கொண்டு முறியடித்தார். அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளையும் கியூப மக்களின் ஆதரவால் வெற்றிகரமாக சமாளித்தார்.
2006 ல் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் அதிகார பொறுப்பை ஒப்படைத்தார். அமெரிக்க விதித்திருந்த பொருளாதாரத் தடையையும் மீறி கியூபா அபரிதமான வளர்ச்சி கண்டது. கியூபா மக்களின் அளப்பரிய உழைப்பால் சர்க்கரைக் கிண்ணமாக கியூபா நகர் சிறந்து விளங்குகிறது.
இப்படி ஒற்றை ஆளாக அமெரிக்கா போன்ற சர்வாதிகார நாட்டினை எதிர்த்து புரட்சியின் மூலம் சிறிய நாடான கியூபா நாட்டினை உலகில் மிகச் சிறந்த நாடாக மாற்றி காட்டினார். அங்கு அனைத்துமே பொதுத்துறை வசம்தான் உள்ளது.
90-வது வயதில் காலமானார்:
அதிபர் பொறுப்பிலிருந்து விலகியிருந்த பிடல் காஸ்ட்ரோ நவம்பர25 ,2016 ஆம் ஆண்டு தனது 90 ஆவது வயதில் காலமானார்.
உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒரு நாட்டின் தலைவராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ அவர்கள் கியூபா மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களாலும் காலம் உள்ளவரை அவர்கள் நினைவுகளில் வாழ்வார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR