முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகளின் கார்ட்டூன்களை பயன்படுத்துவதாக துருக்கி குற்றச்சாட்டு

கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகள் நாயகத்தின் "கேலிச்சித்திரங்கள்" பயன்படுத்தப்படுவதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 25, 2020, 08:21 PM IST
முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகளின் கார்ட்டூன்களை பயன்படுத்துவதாக துருக்கி குற்றச்சாட்டு  title=

கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகள் நாயகத்தின் "கேலிச்சித்திரங்கள்" பயன்படுத்தப்படுவதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது.

தீவிரமான இஸ்லாத்திற்கு எதிராக தனது நாட்டைக் பாதுகாப்பதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் (Emmanuel Macron) கொள்கைகள் துருக்கியை கோபப்படுத்தியுள்ளன. மக்ரோனுக்கும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பல வழிகளிலும் சிக்கல்களாக மாறுவது தெளிவாகத் தெரிகிறது.  

"முஸ்லிம்களை அரக்கர்களாக சித்தரிக்கும் ஐரோப்பிய அணுகுமுறைகள் 1920 களில் ஐரோப்பாவில் யூதர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுகின்றன" என்று துருக்கி அதிபரின் தகவல் தொடர்பு இயக்குனர் பஹ்ரெட்டின் அல்தூன் (Fahrettin Altun) ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.

எர்டோகனின் அறிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ் தனது தூதரை திரும்ப அழைத்த அடுத்த நாள், அல்தூன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.   மக்ரோனுக்கு "மன பரிசோதனைகள்" தேவை என்றும் அவர் பரிந்துரைத்தார்.

"அவதூறான கேலிச்சித்திரங்களை (offensive caricatures) வைத்து தரக்குறைவான அரசியல் செய்பவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான பிரிவினைவாத குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர், மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றனர். இது கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியது அல்ல" என்று அல்தூன் ஆங்கிலத்தில் ட்வீட் செய்துள்ளார்.

"ஐரோப்பிய பொருளாதாரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு மட்டுமே முஸ்லிம்கள் தேவை, ஆனால் அவர்களை ஒருபோதும் தங்களுடையவர்களாக ஏற்கவில்லை என்று அச்சுறுத்துவதும், அதை நினைவூட்டும் செயல் இது. ஆனால் ஒருங்கிணைப்பு பற்றிய பேச்சு என்பது வாயளவிலேயே நின்றுவிடுகிறது."

கிழக்கு மத்தியதரைக் கடலில் கடல் உரிமைகள் தொடர்பாக துருக்கியுடனான சர்ச்சையில் கிரேக்கத்திற்கு பிரான்சின் ஆதரவு, லிபியா, சிரியாவில் துருக்கியின் ஈடுபாடு மற்றும் நாகோர்னோ-கராபாக் தொடர்பாக ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான மோதல்கள் குறித்து பிரான்சின் விமர்சனம் ஆகியவை அங்காராவுக்கும் பாரிஸுக்கும் இடையிலான பிரச்சினைகளில் அடங்கும்.

இந்த மாதம் பிரான்சில் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனைக் காட்டினார். அந்த ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை அடுத்து முஸ்லிம்களைப் பற்றிய பிரான்சின் கொள்கைகள் குறித்த விவாதம் மீண்டும் உத்வேகம் அடைந்துள்ளது.

இந்த வாரம் தனது நாடு தீர்க்கதரிசியை சித்தரிக்கும் "கார்ட்டூன்களை விட்டுவிட மாட்டேன்" என்று மக்ரோன் சபதம் செய்தார். 

தீர்க்கதரிசிகளை காட்சிப்படுத்துவதோ, உருவமாக சித்தரிப்பதோ இஸ்லாம் மதத்தில் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. முகமது நபி அவர்களை கேலி செய்வது அல்லது அவமதிப்பது போன்ற குற்றங்களுக்கு சில முஸ்லீம் நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சனையில் முத்தாய்ப்பாக அல்தூன் கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர், "ஐரோப்பியர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் - 'நீங்கள் அவர்களை விரும்பவில்லை என்பதால் முஸ்லிம்கள் வெளியேற மாட்டார்கள். நீங்கள் அவமதித்தால், நாங்கள் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்ட மாட்டோம். எந்த விலை கொடுத்தும் எங்களை பாதுகாப்போம்" என்று பதிலடி கொடுத்தார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News