ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசி மட்டுமே... அமெரிக்க கடைகளில் தொங்கும் அறிவிப்புகள்!

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியாவின் அறிவிப்பின் எதிரொலியாக, அமெரிக்கா முழுவதும் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பீதியால் அரிசி வாங்குவது அதிகரித்துள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2023, 11:14 AM IST
  • ஏற்றுமதி தடை பாஸ்மதி அல்லாத அரிசிக்கு மட்டுமே பொருந்தும்.
  • பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு தடை ஏதும் இல்லை.
  • பெரும்பாலான தென்னிந்தியர்கள் பாஸ்மதி அல்லாத அரிசியான சோனா மசூரி அரிசியை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசி மட்டுமே... அமெரிக்க கடைகளில் தொங்கும் அறிவிப்புகள்! title=

மத்திய அரசு, கடந்த ஜூலை 20ம் தேதி பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக  மத்திய அரசு தெரிவித்தது. உலக அளவில் 300 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி தான் முக்கிய உணவாகும். ஆசியாவில் தான் 90% அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 40% இந்தியா பங்கு வகிக்கிறது. இந்நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. 

வாடிக்கையாளர் அரிசி வாங்க கட்டுப்பாடுகள்

அதிகரித்து வரும் தேவை காரணமாக, பல கடைகளில் ஒரு வாடிக்கையாளர் வாங்கக்கூடிய அரிசி மூட்டைகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிப்பதற்கும் சரியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், பல கடைகளில் வாடிக்கையாளர்கள் ஒரு வீட்டிற்கு ஒரு அரிசி மூட்டை மட்டுமே வாங்க வேண்டும் என்று அறிவிப்புகளை வைத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்கள்

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் முண்டியடித்து அரிசி வாங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வைரலாகின. அங்கு அரிசி விலை உயர்ந்து வருகிறது. முன்பு 22 டாலராக இருந்த அரிசிப் பையின் விலை தற்போது 47 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பாஸ்மதி அல்லாத அரிசி மீதான இந்தியாவின் ஏற்றுமதி தடையின் தாக்கம் உலகளவில் குறிப்பாக புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உணரப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) தடைக்கு எதிரொலியாக 10-15 மூட்டை சோனா மசூரி அரிசியை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

முன்னணி அரிசி ஏற்றுமதியாளர் அளித்த தகவல்

முன்னணி அரிசி ஏற்றுமதியாளரான டெக்கான் கிரெய்ன்ஸ் இந்தியாவின் இயக்குனர் கிரண் குமார் போலா, அமெரிக்காவில் உள்ள NRI களுக்கான தேவைக்கு போதுமான அரிசி இருப்பு இருப்பதாக உறுதியளித்தார்.  இது ஆறு மாதங்களுக்கு போதுமான அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த அரிசி ஏற்றுமதியாளர்கள் குழுவும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தை (APEDA) அணுகி, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி மீதான தடையை நீக்க வேண்டும் என கோரியது.

மேலும் படிக்க | Rice Export Ban: அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த அரசு, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தது தெரியுமா?

பாஸ்மதி அல்லாத அரிசிக்கு மட்டுமே ஏற்றுமதி தடை

இந்தியாவால் அமல்படுத்தப்பட்ட ஏற்றுமதி தடை பாஸ்மதி அல்லாத அரிசிக்கு மட்டுமே பொருந்தும், பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு தடை ஏதும் இல்லை. பெரும்பாலான தென்னிந்தியர்கள் பாஸ்மதி அல்லாத அரிசியான சோனா மசூரி அரிசியை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் பண்டிகை காலங்களின் போது உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், சில்லறை விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை அரசாங்கம் கடந்த வாரம் தடை செய்தது. நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த அரிசியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி 25 சதவிகிதம் ஆகும்.

உக்ரைன் போருக்கு பிறகு - பல நாடுகள் நம்மிடம் வாங்கி அதிக விலைக்கு விற்க ஆரம்பித்த பின பல உணவு பொருள் ஏற்றுமதி கட்டுபாடுகள் கொண்டுவந்தனர். கடந்த செப்டம்பர் 2022 இல், உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது மற்றும் பல்வேறு தர அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதித்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெரும்பாலான அரிசி வகைகளின் ஏற்றுமதியைத் தடை செய்வது குறித்து நாடு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய அரிசி ஏற்றுமதி விலைகள் ஏழாவது வாரமாக உயர்ந்து, கடந்த வாரம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரத்து குறைந்து போனது.

மேலும் படிக்க | I.N.D.I.A: கூட்டணியின் பெயரை ‘இந்தியா’ என வைத்ததால் சிக்கலில் சிக்கிய எதிர்க்கட்சிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News