Twitter Layoff : 'இப்போ தான் வேல போச்சு' - ஜாலியாக அறிவித்த ட்விட்டர் பணியாளர்

Elon Musk fires twitter employees : தான் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ட்விட்டர் பணியாளரான இந்தியர் ஒருவர் மகிழ்ச்சியாக பதிவிட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 5, 2022, 10:33 AM IST
  • ட்விட்டரில் சுமார் 7500 பேர் பணிபுரிகின்றனர்.
  • நேற்று முதல் பணிநீக்க நடவடிக்கைகள் தொடங்கின.
  • பணிநீக்கம் தொடர்பாக பணியாளர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
Twitter Layoff : 'இப்போ தான் வேல போச்சு' - ஜாலியாக அறிவித்த ட்விட்டர் பணியாளர்  title=

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் கடந்த வாரம் ட்விட்டரின் தலைமை பொறுப்பை ஏற்ற பின், சிஇஓ பரக் அகர்வால் முதல் தலைமையில் இருந்து பலரையும் பணிநீக்கம் செய்தார்.

தொடர்ந்து, ப்ளூ டிக் பயனர்களுக்கு கட்டணம் போன்ற திட்டங்களையும் அறிவித்துள்ளார். இதற்கிடையில், அவர் ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

அந்த வகையில், ட்விட்டர் நிறுவனங்களின் அலுவலங்கள் தற்காலிகமாக இயங்காத நிலையில், நவம்பர் 4ஆம் தேதி அன்று ட்விட்டர் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மெமோ ஒன்று அனுப்பப்படும் என்றும் தகவல் வெளியானது. அதில், குறிப்பிட்ட பணியாளர் பணியில் தொடர்வாரா அல்லது நீக்கம் செய்யப்பட்டாரா என்ற தகவல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பலருக்கும் நேற்று மின்னஞ்சல் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆட்டம் கண்ட ட்விட்டர்... முழு விவரம்!

சிலருக்கு, அவர்களின் பணிசார்ந்த மின்னஞ்சலை திறக்க இயலாதபோதுதான், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதே தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பணியாளர்கள் தங்களின் வேலையை இழந்துள்ள நிலையில், இந்தியாவிலும் பெரும்பாலானோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

ட்விட்டர் இந்தியாவில், மார்க்கெட்டிங் மற்றும் தொலைத்தொடர்பு துறை பணியாளர்களை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலருக்கும் இரண்டு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை அமெரிக்க சட்டதிட்டங்களின்படி நடந்துள்ளதா என்று ஒருபுறம் கேள்வியெழுந்துள்ளது. 

இந்நிலையில், ட்விட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள், தங்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். #OneTeam என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பலரும் பதிவிட்டு வந்தனர். இதில், ஒருவர் தனது வேலையிழப்பு செய்தியை மகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தது பலரின் கவனத்தையும் ஈர்ததது.

யாஷ் அகர்வால் என்பவர் அவரது ட்வீட்டில்,"இப்போதுதான் வேலை பறிபோனது. ட்விட்டருடன் பணியாற்றியது மிகவும் பெருமைக்குரியது. அணியாக, இந்த கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததே பெரும் பாக்கியமாக கருதுகிறேன்" என குறிப்பிட்டு, அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

அந்த புகைப்படத்தில், ட்விட்டர் சின்னம் பொறிக்கப்பட்ட 2 சிறு தலையணையை அவர் கையில் வைத்துள்ளது தெரிகிறது. மேலும், அந்த புகைப்படம் ட்விட்டர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம். இந்த பதிவை இட்ட யாஷ் தயால், ட்விட்டரில் பொது கொள்கை குழுவில் பணியாற்றியதாக தெரிகிறது. 

25 வயதான யாஷ், தனது வேலை பறிபோன விஷயத்தையும் நேர்மறையாக அணுகிய விதம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. பலரும் திடீர் ஆட்குறைப்பை எதிர்த்தும், தங்களின் வருத்ததை தெரிவித்தும் வந்த நிலையில், யாஷ் அகர்வாலின் இந்த செயல் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்பதை வெளிக்காட்டுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ட்விட்டரில் மொத்தம் இருந்த 7500 பணியாளர்களை பாதியாக குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்குறைப்பு குறித்த முழு விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை. ட்விட்டர் இந்தியாவும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் 'ஸ்ரீராம் கிருஷ்ணன்'... யார் இவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News