புதுடெல்லி: அக்டோபர் நான்காம் தேதியன்று நடைபெறவிருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்திவைக்கக் கோரி யுபிஎஸ்சி மாணவர்கள் (UPSC aspirants) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் எனப்படும் யுபிஎஸ்சி ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்டோபர் 4 ஆம் தேதியன்று சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முதல் படியான (Preliminary) தேர்வை நடத்துவதற்கு எதிரான மனுவிற்கு விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பெருந்தொற்று மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சிவில் சர்வீசஸ் 2020 தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பான மனு குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் யுபிஎஸ்சியிடம் பதில் கோரியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வை மேலும் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மனுதாரர்கள், இதனால் இடைவிடாமல் பெய்யும் மழை மற்றும் அதனால் ஏற்படும் வெள்ளத்தின் பாதிப்பும் குறையும், கொரோனாவின் தாக்கமும் குறையும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீதிபதிகள் ஏ.எம் கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கன்னா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, யுபிஎஸ்சி மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. இந்த மாதம் 28ஆம் தேதியன்று மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும்.
திருத்தப்பட்ட காலண்டருக்கு இணங்க தேர்வை நடத்த UPSC எடுத்த முடிவானது, இந்த தேர்வை எழுதும் மாணவர்கள் மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (ஜி) இன் கீழ் பொதுமக்களுக்கு சேவை செய்யும் தொழில் / தொழிலைப் பயிற்சி செய்ய முன்வருபவர்களின் உரிமைகளை மீறுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஏழு மணி நேரம் நடைபெறும் இந்த ஆஃப்லைன் தேர்வு, நாடு முழுவதும் 72 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் சுமார் ஆறு லட்சம் பேர் எழுதவிருக்கிறார்கள், இது இந்த கொரோனா காலத்தில் பாதுகாப்பானதாக இருக்காது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுமா இல்லையா என்ற குழப்பம் மாணவர்களின் தேர்வில் எதிரொலிக்காமல் இருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Read Also | தமிழ்நாட்டில் தனியார்வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கு வழங்க தனிச்சட்டம்: PMK