OPS மகன் ரவிந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்!
தேனி மக்களவை தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின் போது பேசிய அவர் தெரிவிக்கையில்.,
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. திருஷ்டி பரிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக, எனது வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய தோல்வி, மக்கள் ஓட்டு போடாமல் ஏற்பட்ட தோல்வி அல்ல. அதிகார பலம், பணம் பலம் இருந்தும் கூட தேனி தொகுதியில் 4.5 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிட தேனி தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் அளித்து தில்லுமுல்லுகளை செய்திருக்கிறது. பணம் மழையாக இல்லை, சுனாமியாக கொட்டி இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
தேனி தொகுதியில் எப்படியாவது OPS மகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருந்தார். தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் மீது இல்லாத காதல், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மீது மட்டும் மோடிக்கு இருந்தது ஏன்? என்று தெரியவில்லை. தில்லுமுல்லுகள் செய்தாலும் கூட தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட OPS சொந்த தொகுதியான பெரியகுளத்தில் நான் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
தேனி மக்களவை தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே OPS மகன் வெற்றியை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். தேனி தொகுதியில் வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று வழக்கில் குறிப்பிடுவேன். வாக்குப்பதிவு எந்திரங்களை விட வாக்குச்சீட்டு முறை தான் சிறந்தது என்று நாங்கள் வலியுறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.