Delhi MCD Elections 2022: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவிதியை முடிவு செய்யும் உள்ளாட்சி மன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. டெல்லியில் உள்ள மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் மீது அனைவரின் பார்வையும் உள்ளன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இரண்டும் முன்னிலையில் இருக்க, எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் சொற்ப இடங்களில் முன்னணியில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல் முடிவுகளுக்காக டெல்லி மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஆவலுடன் காத்திருக்கிறது. தலைநகரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலின் முடிவுகள் இது.
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 42 மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்படும். துவாரகா, ஓக்லா, மங்கோல்புரி, பிடம்புரா, அலிபூர், மாடல் டவுன், சாஸ்திரி பார்க், யமுனா விஹார், மயூர் விஹார் மற்றும் நந்த் நகரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த மையங்கள் அமைந்துள்ளன. வாக்குகள் எண்ணப்படும் அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சுமார் 20 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸ் படையினரும், 10,000க்கும் மேற்பட்ட போலீசாரும் வாக்கு எண்ணிக்கைமையங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 50.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 250 வார்டுகள் கொண்ட டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (Municipal Corporation of Delhi) தேர்தலில் 1,349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். MCD தேர்தல் முடிவுகள் தேசிய தலைநகருக்கு அப்பாலும் பல அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு கருத்துக் கணிப்புகளின்படி, தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஆஜ் தக்-ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கெஜ்ரிவால் கட்சி 149-171 மாநகராட்சி வார்டுகளை கைப்பற்றும் என்று கூறப்பட்ட நிலையில், முடிவுகள் வேறு மாதிரி உள்ளன.
முதன்முதலாக திருநங்கை வேட்பாளர் பாபி, சுல்தான்பூர் வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 270 வார்டுகளில் 181 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. வேட்பாளர்கள் இறந்ததால் இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. ஆம் ஆத்மி 48 வார்டுகளிலும், காங்கிரஸ் 27 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 2017 எம்சிடி தேர்தலில் வாக்கு சதவீதம் 53 ஆக இருந்தது.
புதிய எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்னதாக, டெல்லியில் மொத்தம் 272 வார்டுகள் இருந்தன. NDMC, SDMC மற்றும் EDMC என மூன்று பிரிவுகளாக டெல்லி உள்ளாட்சி அமைப்பு செயல்பட்டுவந்தது. முந்தைய MCD, 1958 இல் நிறுவப்பட்டது. 2012ல் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது மூன்றாக பிரிக்கப்பட்டது. அவை மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.