வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு!!

நரேந்திர மோடி ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்த நிலையில் வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கிறார்!!

Updated: May 26, 2019, 06:21 PM IST
வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு!!

நரேந்திர மோடி ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்த நிலையில் வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கிறார்!!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஸீ - ஜிம்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் உள்ளிட்ட பல்வேறு உலகத்தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களின் பட்டியலை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்பேரில் குடியரசு தலைவரும் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அமைச்சர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.

இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்போது ஆசிய மண்டலத்தில் அமைதி, வளர்ச்சி, வளமையை உருவாக்க வேண்டியது அவசியம் என்று இம்ரான்கானிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் வன்முறை, பயங்கரவாதம் இல்லாத சூழல் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.