மாநிலத்தில் மாசுவினை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், 15 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட அரசு, வணிக வாகனங்களை தடை செய்வதாக பிகார் அரசாங்கம் அறிவித்துள்ளது!
மாநில முதல்வர் நிதிஷ் குமார் அவர்களுடன் நடத்தப்பட்ட உயர்மட்ட கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தலைமை செயலாளர் தீபக் குமார் திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கையானது பாட்னா மற்றும் மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் இன்று(செவ்வாய்) முதல் அமுல்படுத்தப்படும் என்றும் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் படி மாநிலத்தில் இனி, 15 ஆண்டு வயதுடைய வணிக மற்றும் அரசு வாகனங்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடக சந்திப்பில் "போக்குவரத்துத் துறை நாளை ஒரு சிறப்பு இயக்கத்தைத் தொடங்குகிறது, 15 வயதுக்கு மேற்பட்ட தனியார் வாகனங்கள் மாசு சோதனைக்கு உட்படுத்தக்கூடிய முகாம்கள் அமைக்கப்படும். அதற்குப் பிறகுதான் அவை அனுமதிக்கப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Bihar Chief Secy: Commercial vehicles more than 15-yrs-old will be banned in Patna&adjacent regions.Transport dept is starting a special drive tomorrow, camps will be set up where pvt vehicles more than 15-yrs-old,can undergo pollution tests.They'll be allowed only after it(4.11) https://t.co/SyCiZxBOYx
— ANI (@ANI) November 4, 2019
இதற்கிடையில், 15 வயதுடைய தனியார் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் மீண்டும் மாசு கட்டுப்பாடு சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புகையில் இருந்து மாசுபடுவதைக் குறைப்பதை வலியுறுத்தி குமார், வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு விவசாய மானியம் அளிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த செங்கல் சூளை சமீபத்திய நுட்பத்தைப் பயன்படுத்துகிறதா என்று விசாரிக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
தீபாவளிக்குப் பின்னர் டெல்லி, வடமாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் வாழும் பொதுமக்கள் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லி-NCR-ன் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது, மேலும் காற்றின் தரக் குறியீடு (AQI) 'கடுமையான' பிரிவின் கீழ் உள்ளது. ஹரியானா மற்றும் பஞ்சாபில் மேற்கொள்ளப்படும் விவசாய கழிவு எரிப்பு, காற்று மாசுபாட்டிற்கு முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி அரசாங்கம் திங்களன்று காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஒற்றை-சமமான வாகன எண் திட்டத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.