இந்து பக்தர்களின் மனதை புண்படுத்தியதாகவும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயன்றதாக ரெஹானா பாத்திமா, இஸ்லாமிய சமூகத்தில் இருந்து நீக்கம்...
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இம்மாதம் 17 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கிற்காக திறக்கப்பட்டது.
இதையடுத்து, சமூக ஆர்வலருமான ரெஹானா பாத்திமாவும், ஹைதராபாத்தை சேர்ந்த கவிதா ஜக்கலாவும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றாலும், கோவிலுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. பாதுகாப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன், ரெஹானா நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவருக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில், அவரை இஸ்லாமிய சமூகத்தில் இருந்து நீக்க கேரள இஸ்லாமிய ஜமாத் முடிவெடுத்தது. அவரையும் அவரது குடும்பத்தையும் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து நீக்கியுள்ளதாகவும், இதுகுறித்து எர்ணாகுளம் மத்திய ஜமாத்தை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் கேரளா இஸ்லாமிய ஜமாத் தலைவர் பூங்குஞ்சு தெரிவித்தார்.
மேலும், 2014 ஆம் ஆண்டு 'கிஸ் ஆப் லவ்' போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், நிர்வாணமாக நடித்ததற்காகவும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இஸ்லாமிய மதத்தின் பெயரை பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயன்றதற்காக அவர் மீது நீதிமன்றம் 153A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளது.