“சீனாவுக்கு எதிராக, இந்தியா என்னை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை” என, திபெத்தை சேர்ந்த, புத்த மதத் தலைவர் ‘தலாய் லாமா’ கூறியுள்ளார்
இந்தியாவின் மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அருணாச்சல பிரதேசத்துக்குள் அனுமதிக்ககூடாது என இந்தியா வுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது.
அருணாச்சல பிரதேசத்தை ஓட்டியுள்ள எல்லை வரையறை தொடர்பாகவே இரு நாட்டுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருவதாகவும், இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான அருணாச்சல பிரதேசத்தை முழுமையாக சீனா உரிமை கோர முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
மேலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது என்றும் பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் சீனாவுக்கு ராஜாங்க ரீதியில் சவால் விடுக்கவே இந்தியா தலாய் லாமாவை பயன்படுத்தி வருகிறது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள போம்டிலா நகருக்கு வந்துள்ள தலாய் லாமா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
அஹிம்சை, அமைதி, நல்லிணக்கம், மதச்சார்பற்ற சிந்தனை போன்றவற்றை, எங்கு சென்றாலும், பேசி வருகிறேன். என்னை, சீனாவுக்கு எதிராக, இந்தியா ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை.
முதன் முதலாக, 1959ல், இந்தியாவுக்கு நான் வந்து சேர்ந்த இடம், அருணாச்சல பிரதேசம். எனவே, இந்த மாநிலம் மீது அளப்பரிய பற்று வைத்துள்ளேன். எனக்கு சுதந்திரம் கிடைத்தபோது, இந்தியாவுக்கு தான் முதலில் வந்தேன். இப்பகுதி, எனக்கு, எப்போதுமே சிறப்பானது தான். இந்த பகுதிக்கு வர, எனக்கு அனுமதி அளித்த இந்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.