எலெக்ட்ரானிக் ரசீது (e-Way Bill) நடைமுறை இன்று முதல் நாடு முழுவதும் கட்டாயமாகிறது!
மாநிலத்திற்குள்ளோ அல்லது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கோ ரூ.50,000-க்கு மேற்பட்ட சரக்குகளை கொண்டு செல்கையில் eWay Bill ஆவணங்கள் கட்டாயம் எடுத்துச் செல்லவேண்டும் என்னும் நடைமுறை இன்று முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்படுகிறது.
இந்த eWay பில் மூலம் சரக்குகளின் விவரம், மதிப்பு, வாகனங்களின் விவரம் இடம்பெற்று இருக்கும். இந்த நடைமுறை மூலம் சரக்கு போக்குவரத்து எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஏய்ப்புகளை தடுக்க வேண்டும் என்ற நோகத்தில் இச்சட்டம் அமல் படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை மூலம் வரி வசூல் முறை மேம்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையினால் சரக்குகளை வேறொரு மாநிலத்துக்குள் கொண்டு செல்வதற்காக சோதனை சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வரி வசூல் அலுவலகங்களுக்கும் செல்லத் தேவையில்லை. எனவே சரக்கு போக்குவரத்துக்கான நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் நாள் இந்த eWay பில் அறிமுகமானாலும், பல மாநிலங்கள் உடனடியாக இதனை நடைமுறைப் படுத்தவில்லை. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த இன்று கடைசி நாள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது!