Third Umpire: ட்ரோன்கள் சார்ந்த பாதுகாப்பு முறையை அறிமுகம் செய்தது Indian Railways!!

ரயில்வே தனது உடமைகளை கண்காணிப்பதற்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நிஞ்ஜா ஆளில்லா வான்வழி ஊர்திகளை வாங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2020, 10:32 AM IST
  • மத்திய ரயில்வேயின் மும்பை பிரிவு சமீபத்தில் இரண்டு நிஞ்ஜா UAV-களை வாங்கியுள்ளது.
  • RPF, ரயில்வே பாதுகாப்பு நோக்கத்திற்காக ட்ரோன்களை விரிவாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • ட்ரோன்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் பத்தொன்பது RPF பணியாளர்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
Third Umpire: ட்ரோன்கள் சார்ந்த பாதுகாப்பு முறையை அறிமுகம் செய்தது Indian Railways!! title=

ரயில்வே தனது உடமைகளை கண்காணிப்பதற்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நிஞ்ஜா ஆளில்லா வான்வழி ஊர்திகளை (Ninja UAV) வாங்கியுள்ளது. மத்திய ரயில்வேயின் மும்பை பிரிவு சமீபத்தில் இரண்டு நிஞ்ஜா UAV-களை ரயில்வே பகுதிகளில் நிலைய வளாகங்கள், ரயில் பாதைகள், யார்டுகள், பட்டறைகள் போன்றவற்றில் சிறந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக வாங்கியுள்ளது.

ட்ரோன் (Drone) கண்காணிப்பு தொழில்நுட்பம் மட்டுப்படுத்தப்பட்ட மனித சக்தி கொண்ட பெரிய பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்புக்கு ஒரு முக்கியமான மற்றும் குறைந்த செலவிலான கருவியாக உருவெடுத்துள்ளது. மும்பை ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) நான்கு ஊழியர்களைக் கொண்ட குழு ட்ரோன் பறத்தல், கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி பெற்றுள்ளது. இந்த ட்ரோன்கள் நிகழ்நேர கண்காணிப்பு, வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் கொண்டவை. அவை தானியங்கி ஃபெயில்-ஸேஃப் பயன்முறையிலும் இயக்கப்படலாம்.

ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ரயில்வே பாதுகாப்பு நோக்கத்திற்காக ட்ரோன்களை விரிவாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது. தென்கிழக்கு ரயில்வே, மத்திய ரயில்வே, நவீன பயிற்சி தொழிற்சாலை, ராய்பரேலி மற்றும் தென்மேற்கு ரயில்வே ஆகிய இடங்களில் ரூ .11.87 லட்சம் செலவில் இதுவரை ஒன்பது ட்ரோன்கள் RPF மூலம் வாங்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மேலும் பதினேழு ட்ரோன்களை ரூ .97.52 லட்சம் செலவில் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் பத்தொன்பது RPF பணியாளர்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் ட்ரோன்களை பறக்க விடுவதற்கான உரிமங்களைப் பெற்றுள்ளனர். மேலும் ஆறு RPF பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் வரிசைப்படுத்தலின் நோக்கம் பலத்தை ஊக்கப்படுத்ததி அதிகரிப்பதாகும். ரயில்வே சொத்துக்களை ஆய்வு செய்வதற்கும், யார்டுகள், பட்டறைகள், கார் கொட்டகைகள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்கும் இது உதவக்கூடும் என்றாலும், சூதாட்டம், குப்பைகளை எறிதல், ரயில்வே வளாகத்தில் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றவியல் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பையும் தொடங்க இது பயன்படுகிறது.

"இது தரவு சேகரிப்புக்கு பயன்படுத்தப்படலாம். சேகரிக்கப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு ரயில்களின் பாதுகாப்பான நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு உதவுவதற்காக பேரழிவு தளங்களில் ட்ரோன்களை உபயோகப்படுத்தலாம்."என்று அமைச்சகம் கூறியது.

ALSO READ: கொரோனா எதிரொலி: மெட்ரோ ஊழியர்களின் சலுகைகள் 50% குறைப்பு!!

"ரயில்வே உடமைகள் மீதான அத்துமீறல்களை மதிப்பிடுவதற்கு ரயில்வே சொத்து வரைபடத்தை மேற்கொள்ளும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரிய அளவிலான கூட்ட மேலாண்மை முயற்சிகளின் போது, ​​கூட்டத்தின் அளவு, வருகையின் நேரம் மற்றும் சிதறல் போன்ற முக்கிய உள்ளீடுகளை இது கொடுக்கக்கூடும். அதன் அடிப்படையில் கூட்ட ஒழுங்குமுறை முயற்சிகள் திட்டமிடப்படலாம்."என்று அறிக்கை கூறியது. "COVID-19 லாக்டௌனின் போது லாக்டௌனை செயல்படுத்தவும் புலம்பெயர்ந்தோரின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன," என்று அது கூறியது.

8-10 RPF பணியாளர்கள் தேவைப்படும் பெரிய பகுதிகளுக்கு ஒரு ட்ரோன் கேமராவே போதுமானதாக இருக்கும். எனவே, இது மனிதவள பற்றாக்குறை உள்ள இடங்களில் பயன்படுத்துவதில் உதவியாக இருக்கும். ரயில்வே சொத்து, அப்பகுதியின் உணர்திறன், குற்றவாளிகளின் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ட்ரோன் பீட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல் கவனிக்கப்பட்டாலும் அது உடனடியாக RPF பிரிவுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற முறையில், ஒரு குற்றவாளி வாடிபந்தர் யார்ட் பகுதியில் நிகழ்நேர அடிப்படையில் கைது செய்யப்பட்டார், அவர் ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் திருட்டில் ஈடுபட முயன்றபோது அவர் பிடிபட்டார் என ​​ரயில்வே தெரிவித்துள்ளது.

Trending News