புதுடெல்லி: கடந்த நவம்பர் 8-ம் தேதி ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிறகு நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 3185 ரூபாய் கோடிக்கும் அதிகமான கறுப்பு பணம் சிக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.86 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 677 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனை தொடர்பாக 3100-க்கு அதிகமான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வருமான வரித்துறை நடத்திய சோதனையில் டிசம்பர் 19-ம் தேதி வரை 3185 ரூபாய் கோடிக்கும் அதிகமான கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 428 ரூபாய் கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் அடிப்படையில் சிபிஐ 220-க்கு அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பண மோசடி, கணக்கில் வராத சொத்துக்கள் குவிப்பு, ஊழல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.