BJP Mission 2024: பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி உறுதி! இருகட்சிகளும் இணைந்தால் வெற்றி சாத்தியமா?

BJP Mission 2024 In Karnataka: கர்நாடகாவை மீண்டும் குறிவைக்கும் பாஜக. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடன் பாரதிய ஜனதா கூட்டணி.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 9, 2023, 12:17 PM IST
  • பாரதிய ஜனதா கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கொள்கை அளவில் உடன்பாடு.
  • 2024 மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளை ஜேடிஎஸ் இறுதி செய்திருப்பதாக தகவல்.
  • 10 சதவீத வாக்குகளை வைத்துள்ள ஜேடிஎஸ் உடன் கூட்டணி வைக்க பாஜக விருப்பம்.
BJP Mission 2024: பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி உறுதி! இருகட்சிகளும் இணைந்தால் வெற்றி சாத்தியமா? title=

Lok Sabha Elections 2024: லோக்சபா தேர்தலுக்கு முன், ஆளும் பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி தங்களுக்கான அரசியல் பார்முலாவை அமைக்க கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. அதாவது மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. எனவே வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A.) ஆகிய இரண்டுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு பாரதிய ஜனதாவின் கவனம் தற்போது கர்நாடகா மீது விழுந்துள்ளது.

தென் இந்தியா மீது கவனம் செலுத்தும் பாஜக:
தென் இந்தியாவை குறிவைத்து காய்களை நகர்த்தி வரும் பாஜக, அதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் 2019 ஆம் ஆண்டு போல மீண்டும் வெற்றி பெற பாஜக முயற்சித்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதாவது ஜேடிஎஸ் தலைவர் எச்டி தேவகவுடா, ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை கூட்டணி தொடர்பாக சந்தித்துள்ளார். ஜேடிஎஸ் உடனான கூட்டணிக்கு பாஜக கொள்கை அளவில் உடன்பட்டு உள்ளதாகவும் தகவல். 

மேலும் படிக்க - வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி!

ஜேடிஎஸ் உடனான கூட்டணி குறித்து எடியூரப்பா கூறியது என்ன?
ஜேடிஎஸ் உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, “தேவே கவுடாஜி நமது பிரதமரை சந்தித்து ஏற்கனவே 4 தொகுதிகளை இறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, அவரை வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார். மறுபுறம், ஜேடிஎஸ் ஐந்து இடங்களைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. ஜேடிஎஸ் மாண்டியா, ஹாசன், துமகுரு, சிக்பள்ளாப்பூர் மற்றும் பெங்களூரு ஊரக மக்களவைத் தொகுதிகளைக் கோருகிறது.

குடும்ப அடிப்படையிலான மக்களவைத் தொகுதிகளை கேட்ட ஜேடிஎஸ்
சிக்பள்ளாப்பூர் மக்களவைத் தொகுதியைத் தவிர, மீதமுள்ள நான்கு தொகுதிகளில் தேவகவுடா அல்லது தேவகவுடாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, தும்கூர் தொகுதியில் எச்.டி.தேவே கவுடா, ஹாசன் தொகுதியில் அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் 2019 தேர்தலில் மண்டியா மக்களவைத் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர்களாக களமிறங்கினர். எச்டி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி 2014 தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தொகுதிகளில் அனைத்தும் வொக்கலிகா சமூகத்தின் வாக்காளர்கள் கணிசமான பங்கை வகிக்கக்கூடிய நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - 9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின்

லிங்காயத் - வொக்கலிகா சமூகத்தின் வாக்கை குறிவைக்கும் பாஜக:
பாஜகவும் ஜேடிஎஸ்ஸும் இணைந்தால் தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் சமூக மற்றும் அரசியல் சமன்பாடுகள் முற்றிலும் மாறலாம். கர்நாடகாவின் மக்கள் தொகையில் சுமார் 17 சதவீதமாக இருக்கும் லிங்காயத் சமூகத்தினர் பாஜகவின் முக்கிய வாக்காளர்களாகக் கருதப்படுகிறார்கள். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். அதே நேரத்தில், லிங்காயத்துக்கு அடுத்தபடியாக, 15 சதவீத மக்கள்தொகை கொண்ட வொக்கலிகா சமூகம், செல்வாக்கு மிக்க இரண்டாவது சமூகமாக உள்ளது. வொக்கலிகாக்கள் பாரம்பரியமாக ஜேடிஎஸ் வாக்காளர்களாகக் கருதப்படுகின்றனர்.

ஜேடிஎஸ் தலைவர் தேவகவுடா வொக்கலிகா சமூகத்தில் இருந்து வந்தவர். இரு கட்சிகளும் இணைந்தால், மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் மக்கள் தொகையில் 32 சதவீதமாக உயரும். இந்த கூட்டணி உறுதியானால், இரு கட்சிகளும் சேர்ந்து எவ்வளவு வாக்குகளை பெறுவார்கள் என்பது வேறு விஷயம். அதேநேரத்தில் சமூக மற்றும் பிராந்திய அடிப்படையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடித்தளத்தை வலுப்படுத்த முடியும்.

ஜேடிஎஸ் கூட்டணி பாஜகவுக்கு சாதகமா? பாதகமா?
கர்நாடகாவில் தங்களுக்கென தனி வாங்கு வங்கியை வைத்திருக்கும் பாஜகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் ஜேடிஎஸ் ஊன்றுகோல் ஏன் தேவைப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு காரணம் நடந்து முடிந்த 2023 கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளில் உள்ளது. 2023 கர்நாடக தேர்தலில் பாஜக 36.3 சதவீத வாக்குகளுடன் 66 இடங்களையும், காங்கிரஸ் 43.2 சதவீத வாக்குகளுடன் 135 இடங்களையும் கைப்பற்றியது. ஜேடிஎஸ் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆனால் அக்கட்சி 13.4 சதவீத வாக்குகளை பெற்றது. வாக்குப் பங்கின் அடிப்படையில், காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் ஏழு சதவிகிதம். எனவே பாஜக-ஜேடிஎஸ் இணைந்தால் வாக்கு சதவீதம் உயரும். எளிதாக வெற்றி பெறலாம் என பாஜக நினைக்கிறது.

மேலும் படிக்க - பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

இரண்டாவது அம்சம், 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களில் வெற்றி பெற்று பாஜக 51.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 32.1 சதவீத வாக்குகள் இருந்தபோதிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. அதேநேரத்தில் ஜேடிஎஸ் 9.7 சதவீத வாக்குகளுடன் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2014ல் பாஜக 43.4 சதவீத வாக்குகளுடன் 17 இடங்களையும், காங்கிரஸ் 41.2 சதவீத வாக்குகளுடன் 9 இடங்களையும், ஜேடிஎஸ் 11.1 சதவீத வாக்குகளுடன் 2 இடங்களையும் வென்றது.

பாஜக - ஜேடிஎஸ் இணைந்தால் வெற்றி சாத்தியமா?
இதன் அடிப்படையில், சட்டசபை தேர்தலை விட, லோக்சபா தேர்தலில் ஜே.டி.எஸ். ஓட்டு சதவீதம் குறைவாக இருந்தாலும், ஏறக்குறைய 10 சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றுள்ளது. மறுபுறம் குறிப்பாக தென் இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுவதால், வரும் மக்களவைத் தேர்தல் 2024 இல் மீண்டும் அதிக இடங்களை கைபற்றுவது பாஜகவுக்கு கடினமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வாக்கு சதவீத இழப்பை ஈடுகட்ட பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக, 10 சதவீத வாக்குகளை வைத்துள்ள ஜேடிஎஸ்-க்கு அக்கட்சி சிறந்த வாய்ப்பாக பாஜக கருதுகிறது.

மேலும் படிக்க - இந்தியாவை பாரத் என பெயர் மாற்ற முடியுமா... அரசியலமைப்பு சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News