மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார்!
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் காட்சியின் படு தோல்வியை தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா தனது பதவியல் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இவரைத்தொடர்ந்து தற்போது மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு, தேசிய அளவில் தீவிர களப்பணியில் இறங்கப்போவதாக தெரிவித்துள்ள மிலிந்த் தியோரா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சியை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழுவை மிலிந்த் தியோரை கட்சித் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளார்.
முன்னதாக மக்களவைத் தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மிலிந்த் தியோரா, சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவந்திடம் தோல்வி அடைந்தார். அதன்பின் கட்சிப்பணியில் ஈடுபட்டவந்த மிலிந்த் தியோரா கடந்த மாதம் 26-ஆம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது தான் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் இருப்பதாகவும், கட்சியின் களப்பணியில் ஈடுபட்டு கட்சியை வலுப்படுத்தஇருப்பதாகவும் தெரிவித்தார். இதனை இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோரிடமும் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார்.
தலைவர் பதவியில் இருந்து விலகியது குறித்து மிலிந்த் தியோராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்புகையில் "இப்போதுள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்த அனைவரும் புதிய பங்களிப்பை செய்ய தயாராக இருக்கிறோம். நான் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்ட நிலையில் அதற்கு பதிலாக 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம். தேசிய அளவில் களப்பணியாற்றுவதற்கான வாய்ப்பையும், அதன்மூலம் கட்சியை கட்டமைக்கவும் முடியும் என நம்புகிறேன். இதற்கு மேல் ஒன்றும் கூற முடியாது, மும்பைகாங்கிரஸ் ஒற்றுமைக்கும் சிறப்பாக செயல்படவும் துணை புரிவேன்" என தெரிவித்துள்ளார்.