புதுடெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பாலும், அதைத் தொடர்ந்து நிலவிவருகிற பிரச்சினைகளாலும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சிக்கி தவிக்கிறது. நேற்று பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கோலம் பூண்டு, சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும், ரூபாய் நோட்டு விவகாரத்தில் நேற்று முடங்கிப்போய்விட்டன.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இன்று மாநிலங்களவை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.