நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரோ தலைவர்

நிலவில் விழுந்த சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Last Updated : Dec 4, 2019, 09:29 AM IST
நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரோ தலைவர் title=

நிலவில் விழுந்த சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. 

ஆனாலும், விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தது. இந்நிலையில் விக்ரம் -2 லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பதுகண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் உதவியுடன் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா கூறியுள்ளது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது தொடர்பான தகவலை ஏற்கனவே இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும், மற்றவர்களின் ஆய்வை நாங்கள் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Trending News