ரூ.250-க்கு பாஸ்போர்ட்..!! கர்தார்பூர் வழித்தடத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சுவாமி

பாரதீய ஜனதா கட்சியின் ராஜயசபா எம்.பி. ஆன சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தார்பூரில் இருந்து வெளிவரும் ஆபத்துக்களை பட்டியலிட்டு, பாகிஸ்தானிலிருந்து மக்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2018, 04:59 PM IST
ரூ.250-க்கு பாஸ்போர்ட்..!! கர்தார்பூர் வழித்தடத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சுவாமி title=

பாரதீய ஜனதா கட்சியின் ராஜயசபா எம்.பி. ஆன சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தார்பூரில் இருந்து வெளிவரும் ஆபத்துக்களை பட்டியலிட்டு, பாகிஸ்தானிலிருந்து மக்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

‘‘கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் திட்டம் ஒரு அபாயகரமான நடவடிக்கையாகும். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். இங்கு முறையான பாதுகாப்பு இல்லை. சோதனை செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. வெறும் கடவுச்சீட்டு (Passport) மட்டும் போதாது. ரூ 250-க்கு டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் தற்போது பாஸ்போர்ட் கிடைக்கும். எனவே பாக்கிஸ்தானில் இருந்து மக்களை இங்கு வர அனுமதிக்கக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

வரும் நவம்பர் 28 ஆம் தேதி பாக்கிஸ்தானின் கார்த்தார்பூர் நடைபாதை விழாவில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு யாரும் செல்லக்கூடாது என்றும், பாகிஸ்தானின் அழைப்பை எந்த அமைச்சரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து கார்த்தார்பூருக்கு செல்ல யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பதே என் கருத்து எனவும் கூறியுள்ளார்.

ஆனால் எனது 'நண்பன்' இம்ரான் கான் என்னை கார்த்தார்பூர் நடைபாதை விழாவுக்கு அழைத்திருக்கிறார், நிச்சயம் நான் அந்த விழாவில் கலந்துகொள்வேன் என நவஜோத் சிங் சித்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் சீக்கியர்களின் குருவான குருநானக் வாழ்ந்துள்ளார். எனவே கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் வாழும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல இந்தியாவில் உள்ள தேரா பாபா குருத்வாராவுக்கு பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்கள் புனித பயணமாக இந்தியாவுக்கு வருகின்றனர். குருநானக் தேவின் 549-ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி கர்தார்பூரில் சிறப்பு வழிபாடுகள் நடக்க இருக்கிறது. இதற்காக, இந்தியாவிலிருந்து செல்லும் 3700 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது.

சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள இந்திய சார்பில் குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சர்வதேச எல்லை வரையும், கர்தார்பூரில் இருந்து சர்வதேச எல்லை வரையும், இரு நாடுகள் வழித்தடம் அமைக்க ஒப்புக்கொண்டன. அதன் அடிப்படையில் குருதாஸ்பூர் மற்றும் கர்தார்பூர் இடையே வழித்தடம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து, இந்த திட்டத்திற்க்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு , பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

அதேபோல பாகிஸ்தானில் வரும் 28 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News