பழைய நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம்

Last Updated : Dec 29, 2016, 08:47 AM IST
பழைய நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் title=

 

புதுடெல்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கடந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியது. 

கால அவகாசம் முடிந்த பிறகும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அவற்றை, ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுளை வைத்து இருப்பது குற்றமாக கருதப்படும்.

இதுதொடர்பாக மத்திய அரசு, ‘குறிப்பிட்ட வங்கி ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு அவசர சட்டம்’ என்ற புதிய அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளையில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றும் போது தவறான தகவல்கள் தெரிவித்தால், அவர்களுக்கு ரூ.5,000 அல்லது அவர்கள் டெபாசிட் செய்யும் பணத்தைப் போன்று 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில், அதிகபட்சமாக 10 நோட்டுகள் வரை ஒருவர் வைத்துக் கொள்ளலாம்.

மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு அதற்கு அதிகமாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் ரூ.10 ஆயிரம் அல்லது வைத்து இருக்கும் தொகையைப் போல் 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதல் கிடைத்ததும் அவரச சட்டம் அமலுக்கு வரும்.

முன்பு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது, 1978-ம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அப்போதும் அது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் இப்போதும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட இருக்கிறது.

Trending News