500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்திலிருந்து (நவம்பர் 8) டிசம்பர் 31 வரை தங்களது வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை குறித்த அறிக்கைகளை ஜனவரி 1-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். மேலும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று காலை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் விதமாக மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-
பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான தங்களது வங்கி கணக்கு பண பரிவர்த்தனை பற்றிய தகவல்களை கட்சியின் தலைவர் அமித்ஷாவிடம் 2017 ஜனவரி 1-ம் தேதி அன்று தங்களது மாவட்ட தலைமையின் மூலம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் உத்தர விட்டார்.
பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யும் பணத்திற்கு பிடித்தம் செய்யப்படும் வரித்தொகை கிராமங்களில் மின்சாரம், சாலை, கழிப்பறை, கல்வி வளர்ச்சி மற்றும் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.
பணம் இல்லாத பண பரிவர்த்தனையை நோக்கி நாம் செல்வதற்கு மக்கள் மின்னணு மற்றும் மொபைல் பொருளாதார பரிவர்த்தனை முறைக்கு ஆதரவு அளிக்கவேண்டும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் நேரடி பண பரிமாற்றத்தை தவிர்க்கலாம்.
என்று பிரதமர் பேசினார்.
கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது:-
கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தங்களது தொகுதியில் அடங்கிய பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி நிர்வாக பகுதி வர்த்தகர்கள் பணமில்லாத பரிவர்த்தனைக்கு மாறுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்.
கூட்டத்திற்கு பின்பு நிருபர்களிடம் பேசிய பாராளுமன்ற விவகார மந்திரி அனந்த குமாரிடம் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பில் பாராளுமன்றம் முடங்கி உள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமித் ஷா, குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்கம் முதலே, இதுபற்றி விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று கூறி வருகிறது. எதிர்க்கட்சிகள் விரும்பினால் பாராளுமன்றத்திலும், டெல்லி மேல்-சபையிலும் பிரதமர் பதில் அளிப்பார் என்று தெரிவித்தார்.
வங்கி கணக்கு பண பரிவர்த்தனையை கட்சியிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற மோடியின் உத்தரவை பாஜக எம்.பி.க்களும், மத்திய மந்திரிகளும் வரவேற்று உள்ளனர்.