பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை (கோரம்) இல்லாமல் அவை நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்க்கும் வகையில் பாராளுமன்றகூட்டம் நடைபெறும் போது இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். பங்கேற்காத எம்.பி.,க்கள் வராததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் தவறாமல் கலந்து கொள்வதன் மூலம் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமையை சுட்டிக்காட்டி பேசிய அவர், உங்களில் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அழைத்து அவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று கேட்பேன் என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் அவர் எச்சரித்தார். மேலும் எம்.பி.,க்கள் வருகைப்பதிவை பிரதமர் நேரடியாக கண்காணிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பதில் அளிப்பதற்கு துறைசார்ந்த மத்திய மந்திரிகள் அவையில் இல்லாமல் போனது தொடர்பாக துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.