எனது முடிவில் மாற்றம் இல்லை: ராகுல் காந்தி திட்டவட்டம்

தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக ராகுல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 1, 2019, 04:39 PM IST
எனது முடிவில் மாற்றம் இல்லை: ராகுல் காந்தி திட்டவட்டம் title=

புது டெல்லி: தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக ராகுல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு தாமாக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை, இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். ராகுலின் முடிவை காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்காத நிலையிலும் ராகுல் தனது முடிவில் விடாப்பிடியாக உள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் சிங் பாகல் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி ஆகியோர் இன்று ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனை கூட்டத்திலும் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக ராகுல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராகுலை சந்திப்பதற்கு முன்பு, அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமான நலனுக்கு அவருடைய அர்ப்பணிப்பு மிக முக்கியம்.” எனப் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டும் தனித்து வெற்றி பெற்றது. அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களிலும் வென்றன. மற்ற கட்சிகள் 98 இடங்களில் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு இடங்களில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக்கூறப்படும் அமேதி தொகுதியிலும், முதல் முறையாக தென்னிந்தியாவின் கேராள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் மக்களவை தேர்தலில் அமேதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.

கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாகவும், அந்த பொறுப்பில் காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை, குறிப்பாக தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரையோ அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரையோ நியமிக்குமாறு மூத்த தலைவர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக வந்த தகவல்கள் உண்மை இல்லை காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

ஒருவேளை காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால், அந்த பதவி தற்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் வழங்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன. நமக்கு கிடைத்த தகவலின் படி, அடுத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலட் நியமிக்கப்படுவார் என்றும், இந்த விவகாரம் குறித்து கட்சியின் செயற்குழுவில் பேசப்பட்டதாகவும், இதுக்குறித்து அசோக் கெலட்டிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரிடமும் விவாதிக்கப்பட்டு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Trending News