அரசின் அறிவுரைக்கு பிறகே நோட்டு தடைக்கு ஆர்பிஐ பரிந்துரைத்தது

மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பார்லிமென்ட் குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து உள்ளது.

Last Updated : Jan 11, 2017, 08:35 AM IST
அரசின் அறிவுரைக்கு பிறகே நோட்டு தடைக்கு ஆர்பிஐ பரிந்துரைத்தது

புதுடெல்லி: மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பார்லிமென்ட் குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து உள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி எடுத்தது. 

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை பற்றி ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி தலைமையிலான பார்லிமென்ட் நிதி குழு கேட்டுக் கொண்டிருந்தது.

இதற்கு விளக்கம் அளித்து ரிசர்வ் வங்கி தரப்பில் 7 பக்கங்கள் கொண்ட குறிப்பை நேற்று பார்லிமென்ட் நிதி குழுவுக்கு அனுப்பி வைத்தது.

அதில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு ஒரு குறிப்பை அனுப்பி இருந்தது. அதில் கள்ளநோட்டு, தீவிரவாதத்துக்கு நிதி உதவி, கருப்பு பணம் ஆகிய 3 பெரும் பிரச்சினைகள் உள்ளன. எனவே பழைய ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான நோட்டுகளை திரும்பப் பெறுவதற்குரிய நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து மறுநாளே ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூடி மத்திய அரசின் அறிவுரை குறித்து பரிசீலனை செய்தது. இதுபற்றி யோசிக்கப்பட்ட பிறகு, நோட்டுகளை திரும்பப் பெறலாம் என்ற பரிந்துரையை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவித்தது.

கருப்பு பணம், கள்ளநோட்டு, தீவிரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது ஆகிய பிரச்சினைகளை கையாளுவதில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இது அரியதொரு வாய்ப்பாக அமைந்ததால் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்தே நவம்பர் 8-ம் தேதி ரிசர்வ் வங்கியின் மத்திய குழு பரிந்துரை செய்த சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடி மத்திய மந்திரி சபையை கூட்டி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவது பற்றி  உடனடியாக அறிவித்தார்.

More Stories

Trending News