உரிய கால அவகாசத்துடன் 10th பொதுத்தேர்வை நடத்த வேண்டும்: ஸ்டாலின்!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைத்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின், உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை!!

Last Updated : May 18, 2020, 12:49 PM IST
உரிய கால அவகாசத்துடன் 10th பொதுத்தேர்வை நடத்த வேண்டும்: ஸ்டாலின்!! title=

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைத்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின், உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை!!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்து பள்ளிகள் திறக்கப்பட்டபின் உரிய அவகாசத்துடன் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத போக்கை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை தடுக்க அலட்சியமாக இருந்ததை போல் 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த அரசு அவசரமக்காட்டுகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்தில் இருந்தே அலட்சியத்துடனும், முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளுடனும் நடந்து கொள்வதைப் போலவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதிலும் அ.தி.மு.க. அரசு அவசரம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை தொடர்கிற நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து உறுதியாக எதையும் இப்போது சொல்ல முடியாத சூழலில், ஜூன் 1ஆம் நாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறித்த குளறுபடிகளும், பரிசோதனை எண்ணிக்கை குறித்த வெளிப்படையற்ற குழப்பமும் நீடிக்கின்ற நிலையிலும், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க முடியவில்லை. 11 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; மகாராஷ்ட்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு என்ற மோசமான இடத்துக்கு வந்துவிட்டது. இதில் பச்சிளம் குழந்தைகளும் உண்டு என்கிற பரிதாபத்தில், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்ற அடிப்படையிலேயே தேர்வுகளை நடத்துவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதில் அலட்சியமும் அகங்காரமுமே தெரிகிறது.

பெற்றோரும் மாணவர்களும் பொதுத்தேர்வு வேண்டாம் எனச் சொல்லவில்லை. நோய்த்தொற்றும் ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு நடத்த வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள். அரசாங்கமோ மாணவர்களுக்கு ‘ஆன்லைன்' வகுப்பு, வெளியூர் சென்ற மாணவர்கள் திரும்பி வர ‘இ-பாஸ்' என நெருக்கடியை உருவாக்கி, பெற்றோரையும் மாணவரையும் அச்சுறுத்துகிறது. இதனால் அவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

தமிழக முதலமைச்சருக்கு 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் தாய் எழுதியுள்ளதாக வார இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி, அனைத்து பெற்றோரும் 10ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பால் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Trending News