டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனியில் நடைப்பெற்று வரும் ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் டெல்லி மெட்ரோவின் சில நிலையங்கள் அடைக்கப்படுதவதாக டெல்லி மெட்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி மெட்ரோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "டெல்லி காவல்துறை அறிவுறுத்தல் பேரில் சுக்தேவ் விஹார், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஓக்லா விஹார் மற்றும் ஜசோலா விஹார் ஷாஹீன் பாக் ஆகிய மொட்ரோ நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது." என குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில் ஆஷரம் மெட்ரோ நிலையத்தின் 3-ஆம் வாயிலும் அடைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லியின் ஜாமியா நகர் அருகே ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்களால் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு தீயணைப்பு டெண்டர்களும் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரண்டு தீயணைப்பு படையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
எனினும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் வன்முறையிலிருந்து தங்களை ஒதுக்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில்., "எந்தவொரு வன்முறை போராட்டத்திற்கும் தாங்கள் ஆதரவளிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் "டெல்லியின் தெருக்களில் நடக்கும் வன்முறைகளில் எந்த ஜாமியா மாணவரும் ஈடுபடவில்லை. இவை ஜாமியா மாணவர்களின் உடையில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது" என்று ஜாமியா மாணவர் சங்கமும் நிர்வாகமும் தெரிவித்துள்ளன.
கடந்த மூன்று நாட்களாக ஜாமியா நகரில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்களும், உள்ளூர் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 13), குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக ஓக்லா அண்டர்பாஸிலிருந்து சரிதா விஹார் வரை வாகன இயக்கம் மூடப்பட்டதாக முன்னதாக ஞாயிற்றுக்கிழமை டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது. நியூ பிரண்ட்ஸ் காலனிக்கு எதிரே உள்ள மதுரா சாலையை எதிர்ப்பாளர்கள் தடுத்துள்ளதாகவும், பாதர்பூர் மற்றும் ஆசிரம சௌக்கிலிருந்து போக்குவரத்து சாலை முற்றுகை காரணமாக மாற்று பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
No one shud indulge in violence. Any kind of violence is unacceptable. Protests shud remain peaceful. https://t.co/CUiaGLb9YY
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 15, 2019
இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.