புதுடெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடராஜன் சந்திரசேகரன்.
நடராஜன் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். வரும் பிப்ரவரி 22-ம் தேதி தலைவராக பொறுப்பேற்பார்.
டாடா சன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக பணிகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் சைரஸ் மிஸ்த்ரி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
சைரஸ் மிஸ்த்ரியை தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக, அடுத்த 4 மாதங்களுக்கு ரத்தன் டாடா செயல்படுவார். அதன்பின், புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டதை தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவனத்தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடா தலைமையிலான 5 பேர் குழு நிறுவன தலைவரை தேர்வு செய்தது.
53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் நாமக்கல் அருகே மோகனுரில் 1963-ல் பிறந்தார். கோவை சிஐடியில் இளங்கலை அப்ளைடு சயின்ஸ் திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் முதுகலை கம்யூட்டர் அப்ளிகேசன் படித்துள்ளார். இவரது மனைவி பெயர் லலிதா. மகன் பிரனவ். இருவரும் மும்பையில் வசிக்கின்றனர்.
1987-ம் ஆண்டு டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் சந்திரசேகரன், படிப்படியாக உயர்ந்த இவரால் டாடா நிறுவனத்தின் வர்த்தகமும் உயர்ந்தது.
நாஸ்காம் தலைவராக 2012 - 2013-ம் பதவி வகித்துள்ளார். 53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் தற்போது டாடா சன்ஸ் நிறுவனங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.