2020ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. நேற்றுடன் பாராலிம்பிக் போட்டிகளும் முடிவுக்கு வந்தது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்ற டோக்கியோ பாராலிம்பிக் வீர வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 24-ம்தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றன. மொத்தம் 162 நாடுகள் கலந்துக் கொண்டனர். இந்தியாவின் சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
நேற்று நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்களைப் பெற்று இந்திய வீர வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற வீராங்கனை அவனி லேகாரா ஏந்திச் சென்றார். அவருடன் இந்தியாவின் சார்பில் 11 பேர் அணிவகுப்பில் கலந்துக் கொண்டனர்.
Also Read | I'm sorry. Rules are rules: தாமதமாக வந்ததால் தங்கப் பதக்கத்தை இழந்த வீரர்! சோகக்கதை
பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒட்டுமொத்தமாக 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 24-வதுஇடம் பிடித்தது. 1968 முதல் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்று வந்தாலும், இந்த போட்டிகளில் தான் அதிகம் பதக்கம் வெல்லப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் அவனி லேகாரா, பாட்மிண்டனில் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், ஈட்டி எறிதலில் சுமித் அண்டில், துப்பாக்கி சுடுதலில் மணீஷ் நார்வால் என மொத்தம் 5 தங்கப்பதக்கங்கள் கிடைத்தது.
டேபிள் டென்னிஸில் பவினாபென் படேல், துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜ் அதனா, வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், மாரியப்பன் தங்கவேலு, பிரவீன் குமார், ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, பாட்மிண்டனில் சுஹாஸ் யதிராஜ் என இந்தியாவுக்கு 8 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.
வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், உயரம் தாண்டுதலில் சரத் குமார், துப்பாக்கிச் சுடுதலில் அவனி லேகாரா, ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் குர்ஜார், பாட்மிண்டனில் மனோஜ் சர்கார், துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜ் அதனா என 6 வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் குவித்த இந்திய குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.
In the history of Indian sports, the Tokyo #Paralympics will always have a special place. The games will remain etched in the memory of every Indian and will motivate generations of athletes to pursue sports. Every member of our contingent is a champion and source of inspiration.
— Narendra Modi (@narendramodi) September 5, 2021
‘இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸுக்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி, ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் இருக்கும். பல விளையாட்டுவீரர்களை, தங்கள் விளையாட்டுகளை தொடர ஊக்குவிக்கும். இந்த போட்டிகளில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான். இந்தியா வென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்று மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. வீரர்களுக்குதொடர்ந்து உற்சாகம் அளிக்கும் பயிற்சியாளர்கள், ஆதரவு அளிக்கும் ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் குடும்பங்களை பாராட்ட விரும்புகிறேன்’ என பிரதமர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 207 பதக்கங்கள் பெற்ற சீனா பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. 41 தங்கம், 38 வெள்ளி, 45 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2-வது இடமும், 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் என 104 பதக்கங்களுடன் அமெரிக்கா 3-வது இடமும் பிடித்தன.
ALSO READ | பாலியல் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பதில் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR