இந்திய விமானப்படை அடித்துக் கொன்ற கொசுக்களை எண்ண வேண்டுமா என மத்திய அமைச்சர் வி.கே.சிங் கேள்வி....
டெல்லி: அடித்துக் கொன்ற கொசுக்களை எண்ண வேண்டுமா என பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்து மத்திய அமைச்சர் வி.கே.சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வந்தது. இதை தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், கொல்லப்பட்ட கொசுக்களை எண்ண வேண்டுமா? என முன்னாள் ராணுவ தளபதியும், மத்திய அமைச்சருமான வி.கே.சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானின் பாலகோட்டில், கடந்த மாதம் 26 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்களில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து சரியான விபரம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டு வருகின்றன.
இந்த கேள்விக்கு பதிலளிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்து விட்டார். வெளியுறவு செயலாளர் பதிலளிப்பார் என்று மட்டும் தெரிவித்தார். வெளியுறவு செயலாளர் அறிக்கையில் ஏராளமான பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்று மட்டும் கூறினார். இதை தொடர்ந்து, அமித்ஷா பேசுகையில் 250 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறினார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன் அப்பகுதியில் 300 மொபைல் போன்கள் செயல்பாட்டில் இருந்ததாகவும் கூறி இருந்தார்.
रात ३.३० बजे मच्छर बहुत थे,
तो मैंने HIT मारा।
अब मच्छर कितने मारे, ये गिनने बैठूँ,
या आराम से सो जाऊँ? #GenerallySaying
— Vijay Kumar Singh (@Gen_VKSingh) March 6, 2019
இந்நிலையில், மத்திய அமைச்சர் K.V.சிங் தன்னுடைய டிவிட்டர் பதிவில், நேற்றிரவு 3.30 மணியளவில் ஏராளமான கொசுக்கள் இருந்ததால், கொசு மருந்து அடித்து அதிகளவிலான கொசுக்களை கொன்றேன். இப்போது, நான் கொல்லப்பட்ட கொசுக்களை எண்ணிக்கொண்டிருக்கவா.... இல்லை, நான் தூங்கச் செல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.