புதுடெல்லி : ஜன் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும் அவகாசம் அளிக்கப்பட்டது. பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பிறகு பிரதமரின் ஜன் தன் வைப்பு வங்கி கணக்கு ரூ.64,250 கோடி டெபாசிட் ஆகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கறுப்பு பணம் பதுக்கிய பலர் ஏழைகளின் ஜன் தன் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து ஜன் தன் கணக்கில் டெபாசிட் செய்தவர்கள், அந்த பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் ஜன்தன் கணக்கு வைத்திருப்போர் வங்கியில் இருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமானால் வங்கி மேலாளரின் அனுமதி பெற வேண்டும். கேவைசி (kyc) விபரம் தராதவர்கள் ரூ.5000 மட்டுமே எடுக்க முடியும். ஜன்தன் கணக்கு மூலம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.