உலகின் மிகப்பெரிய தேர்தல் நிறைவு, அனைத்து கண்களும் மே 23 மீது!!

உலகின் மாபெரும் ஜனநாயக தேர்தல் திருவிழா முடிவடைந்த நிலையில், அனைவரின் எண்ணமும் மே 23 ஆம் தேதியை எதிர்நோக்கி!!

Last Updated : May 20, 2019, 08:49 AM IST
உலகின் மிகப்பெரிய தேர்தல் நிறைவு, அனைத்து கண்களும் மே 23 மீது!! title=

உலகின் மாபெரும் ஜனநாயக தேர்தல் திருவிழா முடிவடைந்த நிலையில், அனைவரின் எண்ணமும் மே 23 ஆம் தேதியை எதிர்நோக்கி!!

இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நிறைவு பெற்றுள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்தல், மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.

இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, தமிழகத்தில் வேலூர் தவிர்த்து, 38 தொகுதிகள் உட்பட தேர்தல் நடைபெற்ற 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் தலா 13 தொகுதிகள், மேற்குவங்கத்தின் 9 தொகுதிகள், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், சண்டீகர் ஒரு தொகுதி உட்பட 59 தொகுதிகள், வாக்குப்பதிவு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜகவிலிருந்து, காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நடிகர் சத்ருகன் சின்ஹா உட்பட 918 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். மேற்குவங்க மாநில முதலமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதை ஏற்க முடியாது என்றார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள கர்கி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

மக்களவை தேர்தலில் மொத்தம் 10 கோடியே 1 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்ததாக தகவல்கள் வந்தாலும், அது வாக்குப்பதிவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இறுதிக் கட்டமாக 59 தொகுதிகளில் சுமார் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை வும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் கண்கள் அனைத்தும் 23 ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 

 

Trending News