Pongal 2022: நம் பாரத நாடு பழம்பெரும் நாடு. இங்கு பல மதம், ஜாதி, மொழி, பழக்க வழக்கம், உணவு என பல விதமான மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், இந்தியர்கள் என்ற ஒரு இழை நம் அனைவரையும் ஒன்றுபடுத்தி வைத்துள்ளது.
நம் நாட்டில் கொண்டாடப்படும் அளவிற்கு எந்த நாட்டிலும் இத்தனை பண்டிகைகள் கொண்டாடப்படாது என்றால் அதை மறுப்பதற்கில்லை. நமது தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டாலே, நாம் பல வித விழாக்களை, பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அந்த வகையில், நம் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருப்பது தைப் பொங்கல் பண்டிகை.
பொங்கல் பண்டிகை பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கான, விவசாயிகளுக்கான, விவசாயத்துக்கு உதவும், கதிரவன், பூமி, விலங்குகள், இவற்றுக்கான பண்டிகை. இவற்றைத் தவிர பொங்கல் பண்டிகை நமக்கு பல வாழ்க்கைப்பாடங்களையும் கற்றுத் தருகிறது.
பண்டிகை பாடம் கற்றுக்கொடுக்குமா என வியக்க வேண்டாம். பாடம் கற்றுத் தர பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அவசியம் இல்லையே!! மண்ணில் இருக்கும் புல், பூண்டு, பறக்கும் பறவை, பாயும் புலி, பெய்யும் மழை, ஓடும் நதி, பொக்கை வாய் பாட்டி, படம் எடுக்கும் பாம்பு, பறக்கும் பட்டாம்பூச்சி, இரவில் வரும் நிலவு, தெருவில் ஓடும் சிறுவன், சில்லென் வீசும் காற்று, வள்ளென குரைக்கும் நாய்... இப்படி நம் அருகில் அனைத்திலும் நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ பாடங்கள் இருக்கும் நிலையில், தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப் பொங்கல் சொல்லும் பாடங்களும் ஏராளம் ஏராளம்!! அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் காணலாம்.
பழையன கழிதல்
இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் இருக்கும் மிக முக்கியமான கெட்ட பழக்கம் என்ன? இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும், எதுவும் வேண்டும், எல்லாம் வேண்டும்!!
இப்படி அனைத்தையும் வேண்டும் வெண்டும் என வீணாக சேர்த்து வைத்து தேவையானதை கோட்டை விட்டு விடுகிறோம். ஆனால், அந்த காலத்திலேயே போகி பண்டிகை (Bhogi Festival) மூலம், பழைவற்றை தீயில் போட்டு கொளுத்திவிட்டு, புதியவற்றுக்கு வழி விட வேண்டும் என புரிய வைத்துள்ளனர் நம் முன்னோர். பழையது என்பது பழைய பொருட்கள் மட்டுமல்ல, பழைய, தேவையில்லாத சிந்தனைகள், பழைய விரோதம், பழைய கவலைகள், பழைய பிடிவாதம் என அனைத்தையும் எரித்துவிட்டு, புதியவற்றை வரவேற்க காத்திருக்க வேண்டும் என்பதே போகி பண்டிகை கூறும் பாடம்.
இயற்கையை போற்றுவோம்
பொங்கல் பண்டிகையின் மிகப்பெரிய சிறப்பம்சம், இதன் மூலம் நாம் இயற்கைக்கு காணிக்கையாக செலுத்தும் நமது நன்றிக்கடன்தான். உழவு நமது வாழ்வின் அஸ்திவாரம். அதற்கு உறுதுணையாய் இருந்து நமக்கு உணவளிக்கும் விவசாயிகள், விவசாயம் செய்ய உதவும், கதிரவனுக்கு இந்நாளில் பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம். வயலில் அறுவடையான புதிய அரிசியில் வெல்லம் கலந்து, புதுப்பானையில் (Pongal Pot) பொங்கலிட்டு, புதிய காய்கறிகளை ஒன்றாக சேர்த்து சமைத்து, கரும்புடன் சேர்த்து சூரியனுக்கு படையல் செய்து நாம் சூரியனுடன் சேர்த்து, மண், புழு, பூண்டு, நீர், நிலம் என இயற்கையின் அனைத்து அம்சங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
விலங்கின நண்பர்களுக்கு நன்றி கூறும் நன்னாள்
தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. மனிதர்கள் அனைவரும் சோற்றில் கை வைக்க உழவன் சேற்றில் காலை வைக்கிறான். உழவனுக்கு துணையாக, அந்த நிலத்தை உழுது, விவசாயத்தில் விவசாயிக்கு உற்ற துணையாக கைகொடுத்து கரை சேர வைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இந்த நாட்களில் மாடுகளை நன்றாக அலங்கரித்து உழவர்கள் தங்கள் மாடுகள் மீது தங்களுக்கு உள்ள பெருமிதத்தை தெரிவித்துக்கொள்கிறார்கள்.
ALSO READ | Pongal: கோலம்… இது கலைக்கோலம்… கலாச்சாரக் கோலம்…
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
பொங்கல் கொண்டாட்டங்களின் நான்காவது நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகின்றது. தங்கள் வழக்கமான பணிகளில் சதாசர்வகாலமும் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள், தங்கள் உறவுகளை, நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் மகிழ்ச்சிகரமான பொழுதை கழிக்க வேண்டும் என்ற சிந்தனையில், நம் முன்னோர்கள் ஒரு நாளையே அதற்காக ஒதுக்கி இருக்கிறார்கள். சடங்கு என்று வந்துவிட்டால், அதை விட மனம் வராது என்று நினைத்து இந்த நாளை உருவாக்கிய அவர்களது சமயோஜித புத்தி வியக்க வைக்கிறது.
இந்த நாளில், நம் உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு அவர்களுடன் மகிழ்ச்சிகரமான பொழுதுகளை பரிமாறிக்கொள்கிறோம். பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுகிறோம். பலருடன் ஒன்றாகக் கூடி சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகிறோம். கிராமப்புறங்களில், காணும் பொங்கலன்று, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றங்கள், வீர சாகசப் போட்டிகள் என பல வித நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
நன்றி நவிர்தல்
பொங்கல் பண்டிகை (Pongal Festival) நமக்கு சொல்லித்தரும் மிக முக்கியமான பாடம், நன்றி மறக்காமல் இருப்பது. நம்மில் எத்தனை பேர் நமக்கு உதவி செய்றவங்களுக்கு, அந்த உதவிக்கேற்ற நன்றியை தெரிவிக்கிறோம்? சொல்ல வேண்டும், கண்டிப்பாக சொல்ல வேண்டும். அது மனிதர்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், இயற்கையாக இருந்தாலும், நன்றி மறப்பது நல்லதல்ல.
பொங்கல் என்னும் பாடம்
நம் முன்னோர்கள் செய்துள்ள ஒவ்வொரு விஷயத்திலும் பல வித படிப்பினைகள் உள்ளன. அந்த வகையில், பொங்கல் என்ற ஒரு பண்டிகையில் எத்தனை வாழ்க்கைப்பாடங்களை புகுத்தி உள்ளார்கள் என்ற எண்ணம் வியப்பை அளிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும்போதும் இந்த பாடங்களையும் எண்ணிப்பார்ப்பது நமக்கு நல்லது.
பழமையின் துணைகொண்டு புதுமையை நோக்கி பயணிப்போம். நமக்கு உதவியவர்களை நாம் என்றும் மறவாமல் இருப்போம். மக்களும் மாக்களும் சமமே என்பதை உணர்வோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என நட்பு பாராட்டுவோம். இப்படி நாம் நினைவில் கொள்ள வேண்டியவை பல உள்ளன.
இவற்றை உரக்க சொல்லி உணர வைப்பது தைப் பொங்கல் திரு நாள்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR