#GadgetFreeHour-யுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் பெற்றோர்கள்!

பெற்றோர்களும் குழந்தைகளும் ஏன் #GadgetFreeHour இந்த குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறார்கள்..!

Last Updated : Nov 13, 2019, 02:30 PM IST
#GadgetFreeHour-யுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் பெற்றோர்கள்! title=

பெற்றோர்களும் குழந்தைகளும் ஏன் #GadgetFreeHour இந்த குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறார்கள்..!

ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடிவருகிறோம். இந்நிலையில், இந்த ஆண்டு குழந்தைகல் தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் பெற்றோருக்கு பள்ளிகல்வித்துறை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. 

தற்போதைய கால கட்டத்தில், பெற்றோர் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைந்ததால் அதனை தடுக்கும் வகையில், குழந்தைகள் தினத்தன்று ஒரு மணி நேரம் தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் செலவிட வேண்டுமென பள்ளிகல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முன்பு வரை பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவு என்பது பாலம் போன்றது என்பார்கள். குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளரும் காலங்களில் நல்லொழுக்கத்தையும், அறிவையும் போதித்து வந்தனர் பெற்றோர். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் பெரும்பாலான பெற்றோரின் குழந்தைகள் மீதான அரவணைப்பு, வெறும் சொல்லாகவே உள்ளது. இதனை மாற்றும் நோக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 

அந்த சுற்றறிக்கையில்; குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதி, பெற்றோர்கள் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை  தங்களுடைய செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து குழந்தைகளோடு நேரத்தை செலவிட வேண்டும் எனவும், அந்த நேரத்தில் மின்சாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை வரவேற்பதாகவும், தங்களுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதால், பிள்ளைகளின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் எனவும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு குடும்ப சூழல் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக பராமரிக்காமல் மழலையர் பள்ளியில் சேர்த்து விடுவது தற்போது சகஜமாகிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு பெற்றோரிடம் இருந்து போதிய அன்பும், அரவணைப்பும் கிடைப்பதில்லை. வீடுகளில் தாத்தா, பாட்டி அரவணைப்பில் குழந்தைகள் வளர வேண்டும் என்பது ஒரு தரப்பு பெற்றோரின் விருப்பமாக உள்ளது. 

பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை புரிந்து கொள்வதற்கும் அதைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்வதற்கும் www.gadgetfreehour.com என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 723001911 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது தொடர்பான அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 பள்ளி கல்வி துறை அறிவிப்பினை பெற்றோர்கள் வெறும் அறிவிப்பாக கொள்ளாமல் அன்றாடம் ஒரு மணிநேரம் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து குழந்தைகளுடன் செலவிட வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும். 

#GadgetFreeHour முன்னெடுப்பை ஊக்கப்படுத்த, ஹயாத், ஹில்டன், லீ மெரிடியன் உள்ளிட்ட பிரபல ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் கேட்ஜெட்களை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, இரவு உணவில் 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்திருக்கின்றனர். #GadgetFreeHour முன்னெடுப்புக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து அவர்களுக்கான அன்பையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பாக நிச்சயம் அமையும்.  

 

Trending News