கடந்த 2004ஆம் ஆண்டில் வெளிவந்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் ஒரு காட்சியில் கண்ணுக்கு தெரியாத ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார், கார்த்தி. இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் மிக வித்தியாசமானவை. 2011 இருந்து 2014 வரை பல படங்கள் பத்து நாட்கள் கூட ஓடாமல் நடிகர் நடிகர் கார்த்தியின் சரிவை சந்தித்து.
நடிப்பிற்கு பாராட்டு:
நடிகர் கார்த்தியின் நடிப்பு தமிழ் சினிமாவில் மிக முக்கியமாக உற்று நோக்கப்படுகிறது. நடிகர் கார்த்திக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் புகழுக்கும் முக்கிய காரணம், அவர் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரம்தான். இவரைப் பொறுத்தவரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்கும் நடிப்பு ஆற்றல் உடையவர் என்று தற்போதைய சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.
ரக்கட் பாய்-வீரா
முதல் படத்தையே கல்ட் கதையாக தேர்ந்தெடுத்தார், கார்த்தி. சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பருத்திவீரன் படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இவருக்கு அவரது முதல் படத்திலேயே தனிப்பட்ட கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கவும் இதுதான் காரணம். கார்த்தியின் இத்தனை வருட திரைப்பயணத்தில் அவரது தோற்றங்களை வைத்தே, 'இது இந்தப் படம்' என்று சொல்ல முடியும். 'பருத்திவீரன்' க்ளைமாக்ஸில் கார்த்தியின் நடிப்பு சிவகுமாரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
தொலைத்த பொக்கிஷம்-ஆயிரத்தில் ஒருவன்:
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது அளப்பறிய நடிப்பால் நம்மை கண்ணிமைக்காமல் ரசிக்க வைத்து வைத்திருப்பார் கார்த்தி. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெயர்ந்த சோழ வம்ச மக்கள் வாழ்ந்த இடத்தை தேடி செல்லும் போது இயல்பான நடிப்பால் பலரை ஈர்த்தார் கார்த்தி. இந்த படம் வெளியான போது மக்களின் சிந்தனைகளும் ரசனைகளும் வேறாக இருந்ததால் இப்படம் வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இப்போது கூட நம் சமூக வலைத்தளத்தில் சென்று பார்த்தால் வாரத்திற்கு ஒரு முறையாவது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் பாகம்-2 எப்போது என்ற கேள்வி எழுந்துகொண்டேதான் இருக்கிறது. அதற்கு நடிகர் கார்த்தியின் தத்ரூபமான நடிப்பும் ஒரு முக்கியமாக கரணம்.
தோல்வி பெற்ற படங்கள்:
2011 இருந்து 2014 வரை வெளியான கார்த்தியின் பல படங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. சகுனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி, பல படங்கள் போன்ற படங்கள் சில நாட்களே திரையரங்குகளில் ஓடின. ஆனால் இப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது குடும்பமாக உட்கார்ந்து இந்த படங்களை பலர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
மெட்ராஸ்-காளி:
பா. ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடித்திருந்த மெட்ராஸ் திரைப்படம், காளி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு சுவரை வைத்து அரசியல் களத்தையே அருமையாக எடுத்துரைத்திருக்கும் இந்த கதையில் நாயகனாக நடித்திருந்தார் கார்த்தி. மெட்ராஸ் தமிழ் பேசும் இளைஞராக அப்படியே அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியிருப்பார் நம்ம ஹீராே. இந்த படம் இவருக்கு கம்-பேக் ஆக அமைந்தது.
தீரன் படத்தில் பாேலீஸாக கார்த்தி:
உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் துடிப்பான காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பார் நடிகர் கார்த்தி. இந்த படம் இவரது சினிமா வாழ்க்கைக்கும் திருப்புமுணையாக அமைந்தது. இயக்குநர் ஹெச் வினோத்தின் முதல் படமான இது, ரசிகர்களுக்கு பயங்கரமான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.
பேய் கதாப்பாத்திரம்..
கார்த்தி முதன் முறையாக ரிஸ்க் எடுத்து பேயாக நடித்த படம், காஷ்மோரா. பேய் பிடிப்பதாக ஏமாற்றும் குடும்பமும் அவர்களை தந்திரமாக வரவைத்து போட்டு தள்ள நினைக்கும் ஒரு பேயை பற்றிய படம்தான் இது. இதில் நயன்தாரா காமியோ ரோலில் நடித்திருந்தார். கார்த்தியும் மொட்டை தலை பேயாக பயங்கரம் காட்டினார். விவேக், ஸ்ரீதிவ்யா, மதுமித்ரா போன்ற பல கதாப்பாத்திரங்கள் படத்தில் இருந்தாலும், படம் தோல்வியுற்றது. அனால் இப்போது ரசிகர்களின் அண்டர் ரேட்டட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.
குடும்ப கதைகளின் நாயகன்..
கார்த்திக்கு கிராமத்து நாயகன் கதாப்பாத்திரம் மிகவும் நன்றாகவே ஒத்துப்போகும். இதை மனதில் வைத்துக்கொண்டு கடைக்குட்டி சிங்கம் மற்றும் கொம்பன் போன்ற படங்களில் நடித்தார். இரண்டுமே குடும்ப கதை என்பதால் அவை ஓரளவிற்கு வரவேற்பை பெற்றன. ஆனாலும் இந்த படங்களில் பழைய கார்த்தியை பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
சிட்டி பாயாக சறுக்கல்:
நடிகர் கார்த்தி அவரது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்த ‘தம்பி’ திரைப்படம் ரசிகர்களிடடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. ஆனால் கொஞ்சம் சொதப்பலான திரைக்கதையால் அப்படம் தோல்வி அடைந்தது. அதே போல்தான் ‘தேவ்’ படமும். இரண்டு படங்களிலும் கார்த்தி சிட்டி பாய் போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களுமே கார்த்தியின் ஏறுபாதையில் சரிவாக அமைந்தன.
கம்-பேக் கொடுத்த திரைப்படங்கள்
அவ்வப்பாேது ஃப்ளாப்களையும் டாப்களையும் கொடுத்து வந்த கார்த்தி, அசுரத்தனமான ஹீரோயிசத்தை காண்பித்தது, கைதி படத்தில்தான். சிறை தண்டனை பெற்று முதன்முறையாக தனது குழந்தையை பார்க்கச்செல்லும் பாசமிகு தந்தையாகவும், சண்டை காட்சிகளில் பலரை பறந்து பறந்து அடிக்கும் ஹீரோவாகவும் தனது மொத்த ஆக்ஷன் முகத்தையும் காண்பித்திருப்பார் நடிகர் கார்த்தி. இந்தபடம், இவருக்கு பயங்கர கம்-பேக் ஆக அமைந்தது.
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன்
பொன்னியின் செல்வன் படத்தில் தனது வசீகரத்தை வைத்து மங்கயரை வசியம் செய்தார், கார்த்தி. அந்த படத்தில் வந்த குந்தவை கதாப்பாத்திரம் உள்பட, படத்தை பார்த்த பல பெண்கள் வரை வந்தியத்தேவன் மீது ஆசை கொண்டனர். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க சாக்லேட் பாய் வந்தியத்தேவனாக நடித்திருப்பார், நடிகர் கார்த்தி.
மக்களுக்கு உதவும் கார்த்தி
சினிமா மட்டுமின்றி கார்த்தி பல தொண்டு மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது 31வது பிறந்தநாளில், மக்கள் நல மன்றத்தை அவர் திறந்து வைத்தார். இதன் மூலம் அவரது ரசிகர்களை சமூகத்திற்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவித்தார். இரத்த தானம் செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள்கள் வழங்குதல், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி பைகள் வழங்குதல் போன்ற விஷயங்களையும் கார்த்தி செய்து வருகிறார். மேலும், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் YRG பராமரிப்பு மையத்திற்கும் ஒரு பெரிய தொகையை காசோலையாக வழங்கியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ